Last Updated : 12 Feb, 2018 03:08 PM

 

Published : 12 Feb 2018 03:08 PM
Last Updated : 12 Feb 2018 03:08 PM

கர்நாடகாவின் கம்பளா எருமை ஓட்ட போட்டிக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு: பீட்டாவுக்கு பின்னடைவு

 

கர்நாடக மாநிலத்தில் கம்பளா எனப்படும் எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கர்நாடக மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி, தக் ஷின கன்னடா பகுதிகளில் கம்பளா ஓட்டப்போட்டி பாரம்பரியமாக நடந்து வருகிறது.

சேற்று வயல்களில் எருமை மாடுகளைப் பூட்டி விவசாயிகள் ஓடவிடுவார்கள். நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை அந்த பகுதிகளில் இந்த கம்பளா போட்டி நடக்கும். இந்த போட்டி நடந்தால், சிறப்பான விளைச்சல் இருக்கும்என்றும், விவசாயிகளின் விளையாட்டாகவும் இந்த போட்டி கருதப்படுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல இந்த போட்டி அங்கு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த போட்டியில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டி இந்த போட்டிக்கு நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு தடை பெற்றது.

இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுதுபோல் , கம்பளா போட்டி நடத்தவும் விலங்குகள் வதைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து கர்நாடக சட்டசபையில் அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில், அந்த சட்டம் காலாவதியாகி விட்டத்தைத் தொடர்ந்து கம்பளா போட்டி நடத்த இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி விலங்குகள் நல அமைப்பான பீட்டா, இந்திய விலங்குகள் நல கூட்டமைப்பு(எப்ஐஏபிஓ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், டி.ஓய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பீட்டா அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகினார். அவர் வாதிடுகையில் “நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து, கம்பளா போட்டி நடத்த தடைவிதிக்க வேண்டும். இந்த போட்டிகள் பிப்வரி 18-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. கம்பளா போட்டி நடத்த மாநில அரசு கொண்டு வந்த அவசரச் சட்டமும் காலாவதியாகிவிட்டதால் எந்தவிதமான சட்டப்பாதுகாப்பும் இல்லை ஆதலால், இதற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்.” என வாதிட்டார்.

கர்நாடக மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர்ஜெனரல் பிங்கி ஆனந்த், கம்பளா போட்டிநடத்தும் அவசரச்சட்டத்துக்கு ஒப்புதல் பெற குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்டு அங்கு காத்திருப்பில் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அதன்பின் பிறப்பித்த உத்தரவில், கர்நாடகாவில் கம்பளா எருமை ஓட்டப்போட்டி நடத்த இடைக்காலத் தடை ஏதும் விதிக்க முடியாது. இந்த போட்டி அடுத்த ஆண்டும் நடத்தலாம்,வழக்கை மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என உத்தரவிட்டு, பீட்டா மனுவை நிராகரித்தனர்.

இதையடுத்து, வரும் 18-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பாரம்பரியமான கம்பளா எருமை ஓட்டப் போட்டி நடப்பது உறுதியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x