Published : 15 Feb 2018 03:20 PM
Last Updated : 15 Feb 2018 03:20 PM

ராஜஸ்தானில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை அமைச்சர்: வைரலாகும் வீடியோ

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்ச் காளிச்சரண் சரப், பொது இடத்தில் சிறுநீர் கழித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் காளிச்சரண் சரப். பாஜகவைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தில் டோல்பூர் தொகுதி இடைத் தேர்தல் பணிக்காக சென்றபோது, காரை நிறுத்தி அருகில் கட்டிடச் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானில் சுற்றுலா பயணிகள் அதிகஅளவு வருகை தரும் ஜெய்ப்பூர் நகரில் பொது இடங்களை அசுத்துப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு சாலைகளில், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், ஜெய்ப்பூர் நகரில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சுகாதாரம் மற்றும் சுத்தப்பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநில அமைச்சரே பொது இடத்தில் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அர்ச்சனா சர்மா கூறுகையில் ‘‘அமைச்சர் பதவியில் இருப்பவர் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இது வெட்கக்கேடான செயல்’’ எனக்கூறினார்.

இதனால் ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி விளக்கம் கேட்டு ஜெய்ப்பூர் மாநகராட்சி சார்பில் அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இது பெரிய விஷயமல்ல என கூறியதாகத் தெரிகிறது. இதுபற்றி அமைச்சரை தொடர்பு கொண்டபோது அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் செயயப்பட்டு இருந்தது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x