Published : 06 Feb 2018 07:29 AM
Last Updated : 06 Feb 2018 07:29 AM

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்தியா வன்மை யாக கண்டிக்கிறது. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர்கள், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மன்னிப்பு கிடையாது

“இந்திய எல்லை பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவத்தின் செயலுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. இந்த அறிவீனமான செயலுக்காக பாகிஸ்தான் விரைவில் பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை வரும்” என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் தெரிவித்தார்.

நடவடிக்கைகள் பேசும்

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து இந்திய ராணுவத் துணைத் தளபதி சரத் சந்த், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பாகிஸ்தானின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கப்படும். அதுகுறித்து நான் மேலும் பேச விரும்பவில்லை. மாறாக, இந்த விஷயத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள்தான் பேசும்” என்றார்.

மீண்டும் துல்லியத் தாக்குதல்?

இந்நிலையில், பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் காரணமாக, அந்நாட்டின் மீது இந்திய ராணுவம் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x