Last Updated : 10 Feb, 2024 06:27 PM

11  

Published : 10 Feb 2024 06:27 PM
Last Updated : 10 Feb 2024 06:27 PM

அன்று அமித் ஷா அழைத்தும் செல்லாத ஜெயந்த் சவுத்ரி... இன்று மனம் மாறி பாஜக அணியில் சாய்வது ஏன்?

“முந்தைய அரசுகளால் இன்று வரை செய்ய முடியாததை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை நிறைவேற்றி உள்ளது. பிரதான நீரோட்டத்தில் பங்கு வகிக்காத மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கிறேன்” - இது ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி அளித்த பேட்டி. தனது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்குக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருதை அறிவித்ததும் இப்படியான பேட்டியை கொடுத்த ஜெயந்த் சவுத்ரி, ‘சரண் சிங்குக்கு ‘பாரத ரத்னா’ விருதை அறிவித்ததன் மூலம் மத்திய அரசு தனது இதயத்தை வென்றுவிட்டது’ என்றும் தெரிவித்தார். இக்கருத்தின் மூலம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார் ஜெயந்த் சவுத்ரி.

ஜெயந்த் சவுத்ரி என்டிஏ கூட்டணியை உறுதிப்படுத்தியிருப்பதன் மூலம் பாஜகவின் நீண்டகால அசைன்மென்ட் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயந்த் சவுத்ரியை தங்கள் பக்கம் கொண்டுவர முயற்சிகளை செய்துவந்தது பாஜக. 2021 விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு இந்த முயற்சி இன்னும் தீவிரமாக எடுக்கப்பட்டது. 2021-ல் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடிய அதே சமயத்தில், மேற்கு உத்தரப் பிரதேசத்திலும் விவசாயிகள் பெருந்திரளாக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஜாட் இன மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் போராட்டங்களை முன்னெடுத்ததும் அந்த மக்களே. இந்தப் போராட்டங்களில் முக்கிய அங்கம் வகித்தது ராஷ்ட்ரிய லோக் தளம். அதன் தலைவரான ஜாட் இனத்தைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரியும் விவசாய போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டார். அப்போது, தான் பங்கேற்கும் கூட்டங்களில் `பாஜகவின் வகுப்புவாத அரசியலை கட்டுப்படுத்த ராஷ்ட்ரிய லோக் தளத்தின் அரசியல் எழுச்சியே மாற்று மருந்தாக அமையும்' என்று முழங்கிய ஜெயந்த் சவுத்ரி தொடர்ந்து பாஜக விரோத போக்கை கடைபிடித்தார்.

பாஜவுக்கு எதிரான மனநிலையை ஜெயந்த் கொண்டிருந்தாலும், உத்தரப் பிரதேசத்தின் கடந்த சட்டசபை தேர்தலின்போது பாஜகவை வலுப்படுத்தும் பொருட்டு அமித் ஷா நேரடியாக கூட்டணிக்கு ஆர்எல்டிக்கு அழைப்புவிடுத்தார். உத்தரப் பிரதேச பாஜக எம்.பி. பல்யான் மூலம் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்கு தூதும் விடப்பட்டது. ஆனால், அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த ஜெயந்த சவுத்ரி, "நீங்கள் என்னை அழைக்க வேண்டாம், உங்களால் வீடு, வாழ்வாதாரம் இழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களை அழைத்துப் பேசுங்கள்" என்று வெளிப்படையாக கூட்டணி அழைப்பை நிராகரித்தார்.

இதோடு அமித் ஷா நிற்கவில்லை. ஜெயந்த் சவுத்ரிக்கு செல்வாக்கு மிகுந்த மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷாவின் பேச்சும் சவுத்ரியை சுற்றியே இருந்தது. "உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால் கூட்டணியில் இருந்து ஜெயந்த் சவுத்ரி வெளியேற்றப்படுவார்" என்றார். ஜெயந்த் சவுத்ரியை இதே கூட்டத்தில் ஜெயந்த் பாய் (சகோதரர்) என்று அழைக்கவும் செய்தார். இப்படி ஜெயந்த் சவுத்ரிக்கு அமித் ஷா முக்கியத்துவம் கொடுக்க அவருக்கு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள செல்வாக்கும் ஒரு காரணம்.

கடந்த சில வருடங்களில் வளர்ந்த இளம் அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜெயந்த் சவுத்ரி. இவரை புதிய தலைமுறை அரசியல்வாதி என்று அங்குள்ள அரசியல் நோக்கர்கள் கூறுவதுண்டு. எனினும், பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தின் வாரிசு. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகன் தான் இந்த ஜெயந்த் சவுத்ரி. வெளிநாட்டில் படித்துவிட்டு தொழிலை கவனித்த வந்த ஜெயந்த், தந்தை அஜித் சிங் இறந்தபின் கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டுகளில் இந்திய அளவில் முக்கியமான அரசியல் கட்சியாக இயங்கியது ஆர்எல்டி.

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட, நிலப்பிரபுத்துவம் அதிகம் கொண்ட ஜாட் இன மக்களின் அடையாளமாக விளங்கிய இந்தக் கட்சி 2013 முசாபர்நகர் வன்முறைக்கு பிறகான பாஜகவின் எழுச்சி காரணமாக அந்த மக்களிடமே தனது செல்வாக்கை இழந்தது. குறிப்பாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஜாட் இன மக்கள் பெருவாரியாக பாஜகவுக்கு ஆதரவு அளித்து, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை தேடிக் கொடுத்தனர். அதேநேரம், ராஷ்ட்ரீய லோக் தளம் 22 இடங்களில் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. மேலும், ஒரே ஒரு எம்எல்ஏ தொகுதி மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தது.

தனது அடித்தளத்தை இழந்திருந்த ஆர்எல்டிக்கு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் மூலம் ஜாட் இன மக்களிடம் செல்வாக்குபெற இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் மேற்கு உத்தரப் பிரதேசத்தை பிரதானமாக கொண்ட ஜாட் சமூக மக்கள். விவசாயப் பின்னணியை கொண்ட இம்மக்கள், கடுமையான போராட்டத்தை வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னெடுத்தனர். இதே போராட்டங்கள் வாயிலாக ஜெயந்த் சவுத்ரி தனது சமூக மக்களிடம் தனது கட்சி இழந்த செல்வாக்கை மீட்டெடுத்தார். விவசாயப் போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்ட ஜெயந்த், தனது கட்சி சார்பாக பல போராட்டங்களை நடத்தினார்.

தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் வாயிலாக புதிய உத்வேகத்தில் செயல்பட்ட அவர், இளைஞர்கள் மத்தியில் ஜாட் சமூக மக்களிடமும் பிரபலமடைந்தார். விரைவாக, தனது கட்சியின் ஆஸ்தான செல்வாக்கு மண்டலங்களாக இருந்த மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இப்போது வலுவான தலைவராக உருவெடுத்துள்ளார். வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துவிட்டபோதிலும், அந்தச் சட்டத்தால் பாஜக மீதான ஜாட் சமூக மக்களின் அதிருப்தி இன்னும் குறையவில்லை என்றே சொல்லப்படுகிறது. இது நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் '400 தொகுதி' வெற்றி கனவை கொண்டிருக்கும் பாஜகவுக்கு அச்சத்தையும் ஏற்படுத்த தவறவில்லை. '400 தொகுதி' வெற்றி கனவை எட்ட 80 தொகுதிகளை கொண்டிருக்கும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெறும் வெற்றி மிக முக்கியமானது.

இதனால் இங்கு வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதை கணித்தே சமீப காலங்களில் ஜாட் சமூக மக்களுக்கு மோடியும், அமித் ஷாவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். "இயல்பிலேயே போராட்ட குணமிக்கவர்கள், ஜாட் மக்கள்" என்று ஒருமுறை பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதேபோல் அமித் ஷா ஒரு முறை உத்தரப் பிரதேசம் வந்தபோது, ஜாட் சமூக பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தையும் பாஜக நடத்தியது. ஆனால், இந்தக் கூட்டத்தில் ஜாட் சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்பட்டது. இதையடுத்தே ஜாட் சமூக மக்களின் ஒற்றைமுகமாக மாறியிருக்கும் ஜெயந்த் சவுதிரியை வளைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது பாஜக. அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளது.

நேற்று பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சேர தயாராகி விட்டீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா?. இன்று அதை நான் எப்படி மறுக்க முடியும்?” என்றார் ஜெயந்த் சவுத்ரி. தனது தாத்தாவுக்கு பாரத் ரத்னா விருது அறிவித்தற்காக மட்டுமே பாஜக கூட்டணி பக்கம் சாயவில்லை ஜெயந்த். மற்ற காரணங்களும் உள்ளன.

2014, 2019 என முந்தைய இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் ஆர்எல்டிக்கு தோல்வியே கிடைத்து. ஜெயந்த் ஆர்எல்டி தலைவராக பொறுப்பேற்ற காலகட்டமான இதில் தோல்வியுடன் மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது அக்கட்சி. ஆர்எல்டி தலைவராக ஜெயந்த் பெற்ற பெரிய வெற்றி என்றால், உ.பி.யில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் 32 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு கிடைத்த 8 தொகுதிகள் தான். தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் தனது கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் கட்டாயம் ஒரு தலைவராக ஜெயந்த் சவுத்ரிக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணி ஆட்சியமைக்கும், அதன்மூலம் ஆட்சியில் பங்கு வகிக்கலாம் என்ற ஜெயந்தின் கணக்கு தப்பாகியது.

அதுமட்டுமல்ல, சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணி தொடக்கம் தொட்டே பதற்றம் நிறைந்த கூட்டணியாகவே இருந்து வருகிறது. தலைவர்கள் மட்டத்தில் சமரசங்கள் இருந்தாலும், தொண்டர்கள் மட்டத்தில் பொருந்தா கூட்டணியாக இருந்தன. வரும் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி – ஆர்எல்டி கூட்டணி கடந்த ஜனவரி 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், தொகுதி பங்கீட்டில் சமாஜ்வாதி கட்சி மோசமாக நடத்தியதாக ஆர்எல்டி தொண்டர்கள் குமுறிவருகின்றனர்.

கைரானா, முசாபர்நகர் மற்றும் பிஜ்னோர் என தனது வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதிகளை ஆர்எல்டி கேட்க, சமாஜ்வாதியோ பாஜகவின் கோட்டையான ஃபதேபூர், சிக்ரி மற்றும் மதுரா தொகுதிகளை வழங்குவதாக ஒற்றைக் காலில் நிற்கிறது. அதிலும் சிலவற்றில் சமாஜ்வாதி கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்துகிறது. குறிப்பாக, ஆர்எல்டியின் கோட்டையான முசாபர்நகரை அகிலேஷ் தனது கட்சியின் ஹரிந்தர் மாலிக்கிற்கு வழங்க பிடிவாதமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், அதேநேரம் ஆர்எல்டி-காக கூட்டணி கதவை திறந்தே வைத்திருக்கும் பாஜக அக்கட்சிக்கு அளித்திருக்கும் ஆஃபர் என்னவென்றால், மக்களவைத் தேர்தலுக்காக முசாபர்நகர் உட்பட நான்கு தொகுதிகள், ஜெயந்த் சவுத்ரிக்கு மத்திய அமைச்சர் பதவி, மாநில அரசில் இரண்டு அமைச்சர் பதவி ஆகியவை. தொடர் தோல்வி, சமாஜ்வாதி கூட்டணி குறித்த தொண்டர்களின் அதிருப்திகளால் துவண்டுகிடக்கும் ஆர்எல்டிக்கு கிட்டத்தட்ட பூஸ்ட்டாக அமைந்திருக்கிறது இந்த ஆஃபர்.

இதனை கருத்தில்கொண்டு தற்போது பாஜக பக்கம் சாய்ந்துள்ளார் ஜெயந்த் சவுத்ரி, இதன்வெளிப்பாடே சமாஜ்வாதி தரப்பில் ராஜ்ய சபா எம்பியாக அனுப்பப்பட்ட ஜெயந்த், தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியிருப்பதுடன், என்டிஏ கூட்டணியில் சேர தயாராகி விட்டீர்களா என்ற கேள்விக்கு, “அதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா?. இன்று அதை நான் எப்படி மறுக்க முடியும்?” என்று அதிரடியாக கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x