Published : 09 Feb 2024 11:25 AM
Last Updated : 09 Feb 2024 11:25 AM

2 பேர் உயிரிழப்பு, 100+ காயம்: உத்தராகண்ட் வன்முறையும் பின்புலமும்

ஹல்த்வானி: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக மதரஸா இடிப்பு சம்பவம் தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் கூறுகையில், "இந்தக் கலவரத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் பலர் போலீஸார். ஹல்த்வானியில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

போலீஸாரும், மாவட்ட நிர்வாகமும் யாரையும் தூண்டிவிடவில்லை, துன்புறுத்தவும் இல்லை என்பதை நீங்கள் (வீடியோவில்) பார்த்திருப்பீர்கள். உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் சிலர் உயர் நீதிமன்றத்தை அணுகி இருந்தனர். சிலருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. சிலருக்கு அவகாசம் வழங்கப்படவில்லை.

கால அவகாசம் வழங்கப்படாத இடங்களில் பொதுப்பணி துறையினர் மற்றும் நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இது தனிப்பட்ட முறையில் யாருக்குமோ அல்லது சொத்துகளுக்கு எதிரான செயலோ இல்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்த இடம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட காலி நிலம். அது எந்த மத அமைப்பாகவும் பதிவு செய்யப்படவில்லை அல்லது அப்படியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அந்த சொத்துகள் மீது தடை ஏதும் இல்லாததால் நாங்கள் ஆக்கிரமிப்பு அகற்றதைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்தோம்.

பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருவதால், இங்கேயும் நாங்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்டோம். ஆக்கிரமிப்பு அகற்றம் யாரையும் காயப்படுத்தவோ, தூண்டிவிடும்படியோ, துன்புறுத்தும் படியோ இல்லாமல் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து விஷயங்களும் சரியான முறையில் செய்யப்பட்டு வந்தன.

பாதுகாப்புக்காக போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது பெரிய கும்பல் வந்து எங்கள் குழுவினரை அரைமணி நேரம் தாக்கியது. நகராட்சி ஊழியர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கும் நாளில் படைகள் மீது தாக்குதல் நடத்துவது திட்டமிடப்பட்டிருக்கிறது. முதல் கும்பல் கற்களை வீசிவிட்டு சென்றது. இரண்டாவதாக வந்த கும்பலிடம் பெட்ரோல் குண்டுகள் இருந்தன. எங்களுடைய குழு எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை.

பன்பூல்புரா காவல் நிலையத்துக்கு வெளியே சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீஸார் வானை நோக்கி சுட்டனர். கலவரத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறந்தவர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனரா, அவர்கள் சுட்டுக் கொண்டதில் இறந்தனரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

கலவரக்காரர்கள் பந்தல்பூரா காவல் நிலையத்துக்கு தீ வைக்க முயன்றனர். அப்போது போலீஸார் காவல் நிலையத்தில் இருந்தனர். என்றாலும் கலவரக்காரர்களின் முயற்சியை தடுத்தனர். கலவரக்கார்களை காவல் நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடந்து கலவரம் பந்தல்பூரா பகுதிக்கு அருகில் உள்ள காந்தி நகருக்கு பரவியது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பக்கத்து இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரகலாத் மீனா கூறுகையில், "மதரஸாவும், மசூதியும் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டது, நீதிமன்ற உத்தரவுப்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன" என்றார்.

இதனிடையே, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹல்த்வானி கலவரம் குறித்து விவாதிக்க தலைநகர் டேராடூனில் தலைமைச் செயலாளர் ராதா ரதுரி மற்றும் டிஜிபி அபினவ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினார். மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், கலவர சம்பவங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

சம்பவத்தின் பின்னணி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸாவை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசியும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதலும், வாகனங்களுக்கு தீயும் வைக்கப்பட்டன. அங்குள்ள பன்பூல்புரா பகுதியில் சுமார் 2 கி.மீ பரப்பிலான ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வரும் இஸ்லாமிய மக்களை அங்கிருந்து வெளியேற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து போராடிய மக்கள், சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. வரும் 14-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருந்தும் அவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றியதாக தெரிகிறது. நாட்டிலேயே முதல் முறையாக உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x