Published : 06 Feb 2024 06:26 AM
Last Updated : 06 Feb 2024 06:26 AM

சிபிஐ.யிடம் 1,025 வழக்குகள் நிலுவையில் உள்ளன: ஆண்டறிக்கையில் தகவல்

புதுடெல்லி: மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை 2022-23 ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி 2022 டிசம்பர் 31-ம் தேதி வரை சிபிஐயின் மொத்த அனுமதிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கை 7,295 ஆகும். இதில் 1,695 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களில் ஒரு சிறப்பு அல்லது கூடுதல் இயக்குநர், 2 இணை இயக்குநர்கள், 11 டிஐஜி.க்கள், 9 எஸ்எஸ்பி.க்கள், ஒரு கூடுதல் எஸ்பி., 65 டிஎஸ்பி.க்கள், 360 இன்ஸ்பெக்டர்கள், 204 சப்-இன்ஸ்பெக்டர்கள், 51 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 123 தலைமை காவலர்கள், 281 காவலர்கள் மற்றும் 367 தொழில்நுட்ப அதிகாரிகள் பணியிடங்களும் அடங்கும்.

2022-23 ஆண்டறிக்கையின்படி 943 பதிவு செய்யப்பட்ட வழக்குகள், 82 பூர்வாங்க விசாரணைகள் என மொத்தம் 1,025 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பதிவு செய்யப்பட்ட 943 வழக்குகளில் 447 வழக்குகள் ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.இதுபோல் 82 பூர்வாங்க விசாரணைகளில் 60 விசாரணைகள் 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. மேலும் லோக்பால் பரிந்துரைத்த 23 விசாரணைகளும் நிலுவையில் உள்ளன.

2022-ல் சிபிஐ.யின் 557 வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளன. இதில் 364 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 111 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 13 வழக்குகள் விடுவிக்கப்பட்டன. 69 வழக்குகள் பிற காரணங்களுக்காக தீர்க்கப் பட்டன. தண்டனை விகிதம் 74.59% ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x