Published : 05 Feb 2024 09:59 AM
Last Updated : 05 Feb 2024 09:59 AM

ஜார்க்கண்ட் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - தப்புமா சம்பய் சோரன் அரசு?

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜார்க்கண்ட் முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் தேவை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரு இடம் காலி யாக உள்ளது. எஞ்சியுள்ள 80 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஜேஎம்எம் கூட்டணிக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணிக்கு மொத்தம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. ஜேஎம்எம் (28), காங்கிரஸ் (16), ஆர்ஜேடி (1), சிபிஐ (எம்எல்)1. அதேநேரம், பாஜக கூட்டணிக்கு 29 எம்எல்ஏக் களின் ஆதரவு உள்ளது. ஜேஎம்எம் கூட்டணி வசம் 46 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தற்போது 43 எம்எல்ஏக்கள் சம்பய் சோரன் அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர, முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அமலாக்க இயக்குனரகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அவருக்கு அனுமதி அளித்துள்ளது.

"ஆபரேஷன் தாமரை" திட்டத்தின்கீழ், ஆளும் கூட்டணி கட்சிகளின் சில எம்எல்ஏக்களை பாஜக அணுகியதாக ஜேஎம்எம் தரப்பு குற்றம்சாட்டியது. இதையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆளும் ஜேஎம்எம் கூட்டணி எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதை தடுக்க அவர்கள் அனைவரும் ஹைதராபாத் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் இன்று மீண்டும் ராஞ்சி அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்சிகள் சொல்வது என்ன?: ஜேஎம்எம் தலைவர் மனோஜ் பாண்டே கூறுகையில், "இது வெறும் சம்பிரதாயம் என்று நான் நினைக்கிறேன். இண்டியா கூட்டணியின் பெரும்பான்மை எண்ணிக்கை மற்றும் ஒற்றுமையைப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகளின் (பாஜக) உற்சாகம் ஏற்கனவே குறைந்துவிட்டது. எங்கள் கூட்டணியின் பெரும்பான்மை எண்ணிக்கை 48ஐ தாண்டும். எங்கள் கட்சியும், எங்கள் கூட்டணியும் ஒன்றுபட்டது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டு நம்பிக்கை வாக்களிப்பார்." என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி தோல்வி அடையும் என அம்மாநில பாஜக தலைமைக் கொறடா பிரஞ்சி நரேன் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷா தியோ கூறுகையில், “நம்பிக்கை தீர்மானத்தின் முடிவு எதுவாக இருந்தாலும், ஜார்க்கண்ட் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தின் முன் ஜார்கண்ட் அவமானப்படுத்தப்பட்ட விதம் முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு முதல்வர் 40 மணி நேரம் எந்த தடயமும் இல்லாமல், மாநில உயர் அதிகாரிகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தப்பி ஓடியிருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x