Last Updated : 16 Feb, 2018 03:23 PM

 

Published : 16 Feb 2018 03:23 PM
Last Updated : 16 Feb 2018 03:23 PM

நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி பாஸ்போர்ட் சஸ்பெண்ட்: மத்திய அரசு நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1,400 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி, அவரின் வர்த்தகக் கூட்டாளி மெகுல் சோக்‌ஷி ஆகியோரின் பாஸ்போர்ட்டை அடுத்த 4 வாரங்களுக்கு சஸ்பெண்ட் மத்திய அரசு இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமாகமாக ரூ.1400 கோடி பணப்பரிமாற்றம் செய்ததாகவும், ரூ.280 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாகவும் தொழிலதிபர் நிரவ் மோடி மீது சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரையடுத்து, நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் மீதும், வர்த்தகக் கூட்டாளியும் உறவினரான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் அதிபர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் மீதும் சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில், அவர்கள் தேடப்படும் குற்றவாளியாகவும் மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், நிரவ்மோடி, அவரின் வர்த்தகக் கூட்டாளி மெகுல் சோக்‌ஷி ஆகியோரின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், ஏன் உங்கள் பாஸ்போர்ட்டை சஸ்பெண்ட் செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு ஒருவாரத்துக்குள் பதில் அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவாரத்துக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அமலாக்ப்பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த இருவரின் பாஸ்போர்ட்டும் உடனடியாக 4 வாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x