Published : 22 Jan 2024 11:51 PM
Last Updated : 22 Jan 2024 11:51 PM

"இன்றாவது ராவணனை பற்றி பேச வேண்டாம்" - ராகுலை குறிப்பிட்டு அசாம் முதல்வர் சாடல்

குவாஹாட்டி: "இன்றைக்காவது ராவணனைப் பற்றி பேச வேண்டாம்" என்று ராகுல் காந்தியை குறிப்பிட்டு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார். சட்டம் - ஒழுங்கு காரணங்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அசாம் தடைவிதித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்துடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்குள்ள ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் நேற்று (ஜன.22) சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். துறவி, அறிஞர், சமூக - மத சீர்திருத்தவாதியான ஸ்ரீமந்த சங்கர்தேவா, அசாம் கலாச்சாரம், மத வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக அறியப்படுகிறார். ஆனால், அந்தக் கோயிலுக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, “சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி என்னைத் தடுத்துள்ளனர். வைஷ்ணவ மத புனிதர் ஸ்ரீமந்த சங்கரதேவ பிறப்பிடத்துக்கு என்னைத் தவிர வேறு யார் சென்றாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வராது என்பதுபோல் அரசு நடந்துள்ளது. கவுரவ் கோகோய் சென்றால் பிரச்சினை இல்லை. ஆனால், நான் சென்றால் பிரச்சினையாகுமாம். இதற்குப் பின்னால் வேறேதும் காரணம் இருக்கலாம்.

ஆனால், நான் இன்னொரு முறை வாய்ப்பு கிட்டும்போது படத்ராவா கோயிலுக்குச் செல்வேன். அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே சங்கரதேவ் வகுத்த பாதையை பின்பற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

இதனிடையே, அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் இன்று ராகுல் காந்தி தெருமுனைப் பிரச்சாரங்களுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அவரை அந்த மாவட்டத்துக்கு வர வேண்டாம் என்று மாவட்ட காவல் ஆணையார் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தான் ராகுல் காந்தியை ஏன் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஏன் ராவணனைப் பற்றி பேசுகிறீர்கள். குறைந்த பட்சம் ராமரைப் பற்றி இன்றாவது பேசலாமா?. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ராமரைப் பற்றி பேசுவதற்கு இன்று நல்ல நாள். இன்றாவது ராவணனைப் பற்றி பேச வேண்டாம்" இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x