

ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோயில்களில் பிரதமர் மோடி தரிசனம்: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார். பின்னர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அக்னி தீர்த்த கடலில் பிரதமர் புனித நீராடினார். திருச்சியிலும் ராமேசுவரத்திலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது”: காசா போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்: "திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவி சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவி ரேகாவை கொடுமைப்படுத்தியவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்பவர்கள் மீதும் வழக்கு நீட்டிக்கப்பட வேண்டும். அனைவரிடமும் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் கைது செய்ய வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நாடாளுமன்ற ஜனநாயக சிந்தனையை, அரசியல் சாசன அடிப்படையையும் சிதைத்துவிடும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது, தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்காது என்றும், கட்சித் தாவலை ஊக்குவிக்கும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை சார்பில் 8 சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், அவரது இல்லத்தில் வைத்து சனிக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வீட்டின் முன்பு குவிந்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், முதல்வரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு நிலவியது.
“சாதி, மதத்தின் பெயரால் பாஜக மக்களை பிரிக்கிறது”: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “சாதி, நம்பிக்கை, மதத்தின் பெயரால் பாஜக மக்களை பிரிக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ.357 கோடியாக உயர்வு: “மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயி்லுக்கு மொத்தம் ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகும்” என்று தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோவை உருவாக்கியவர் கைது: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோவை உருவாக்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
பாக். நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்: பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ராமர் கோயில் திறப்பு விழா: மத்திய அரசு அறிவுரை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் "ஜனவரி 22-ம் தேதி, அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் சீர்குலைக்கும் சில சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலியான செய்திகள் ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட வாய்ப்புள்ளது.
எனவே செய்தித்தாள்கள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள், நடப்பு விவகாரங்களை வெளியிடுபவர்கள் செயல்பட வேண்டும். தவறான, மதநல்லிணக்கத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.