

குமுளி: “மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மொத்தம் ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகும்” என்று தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவ.16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிச.27-ல் நடைசாத்தப்பட்டு மகரவிளக்கு பூஜைக்காக டிச.30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு வழிபாடுகள் முடிந்த நிலையில் இன்று இரவு நடை சாத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்களுக்கு நிலக்கல்லில் 1,100, பம்பையில் 500 மற்றும் சன்னிதானச் சாலையில் சுமார் 1,200 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு சீசனில் 50 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 5 லட்சம் பக்தர்கள் கூடுதலாக வந்துள்ளனர். இந்த ஆண்டு வருவாய் ரூ.357.47 கோடி ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை ரூ.10 கோடி அதிகரித்துள்ளது” என்றார்.