Published : 20 Jan 2024 04:20 PM
Last Updated : 20 Jan 2024 04:20 PM

ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை: ஜார்க்கண்ட் முதல்வர் இல்லத்தில் பரபரப்பு

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை சார்பில் 8 சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், அவரது இல்லத்தில் வைத்து இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வரின் கட்சியினர் குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல்வரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனின் நெருங்கிய நண்பரான மிஷ்ராவையும், மேலும் இருவரையும் அமலாக்கத் துறை ஏற்கெனவே கைது செய்தது. இந்நிலையில், இன்று மதியம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

நில அபகரிப்பு மோசடியின் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை சார்பில் 8 சம்மன்களை னுப்பியது. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை இது தொடர்பான விசாரணைக்கு ஜனவரி 16 முதல் 20-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 13-ஆம் தேதி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு 20-ஆம் தேதி தனது வீட்டில் வைத்து தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகளே, அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஞ்சி மூத்த போலீஸ் சூப்பிரண்டு சந்தன் குமார் சின்ஹா இது குறித்து கூறும்போது, “1,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, விசாரணை முகைமை அலுவலகம் மற்றும் முதல்வர் மாளிகையைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஞ்சி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. விசாரணை முடியும் வரை முதல்வர் இல்லம் அருகே போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்றார்.

ராஞ்சி எஸ்எஸ்பி, நகர எஸ்பி, சதர் டிஎஸ்பி ஆகியோர் பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். முதல்வர் இல்லம் அருகே தண்ணீர் பீரங்கி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களைக் கலைக்க முதல்வர் மாளிகையைச் சுற்றி மூன்று இடங்களில் பேரிகார்டுகளும், ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x