Published : 22 Feb 2018 08:10 AM
Last Updated : 22 Feb 2018 08:10 AM

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் வேற்றுமத ஊழியரை பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிவரும் இந்து அல்லாத வேற்று மதத்தவர்களை மறு உத்தரவு வரும் வரை பணி நீக்கம் செய்ய வேண்டாமென ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாட்டில் உள்ள முக்கியமான இந்து தார்மீக அறக்கட்டளையாகும். இந்த அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் இந்து தர்ம பிரச்சாரங்கள், முக்கிய கோயில்களில் விழாக்கள், பிரம்மோற்சவங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. மேலும், இந்து சமய கலாச்சாரங்களை ஊக்குவிக்கின்றது. இது தவிர, வேத பாடசாலை, சாதாரண பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அன்னதானம், கோ சாலை, போன்றவையும் தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த மாபெரும் இந்து அறக்கட்டளையில், வேற்று மதத்தை சேர்ந்த சிலர் தவறான சான்றிதழ்கள் வழங்கி ஊழியர்களாக பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

44 பேருக்கு நோட்டீஸ்

அதன்பேரில், தேவஸ்தானம் இது குறித்து விசாரணை நடத்தி, 44 தேவஸ்தான ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது. இவர்களில் பலர் திருப்பதி தேவஸ்தான ஊழியர்களாக பணியாற்றி வருவதோடு, அவர்களின் மத கோயில்களுக்கும் சென்று வருவதை சில தெலுங்கு ஊடகங்கள் தங்களது சேனலில் ஒளிப்பரப்பின. இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய தேவஸ்தானம், இது குறித்து விளக்கம் கேட்டு சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, சம்மந்தப்பட்ட ஊழியர்கள், ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘‘எங்களுக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது. ஆதலால், நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். எங்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் முனைந்து வருகின்றனர்.இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று அவர்கள் தங்களது மனுவில் கூறியிருந்தனர்.

பதில் அளிக்க நோட்டீஸ்

இந்த மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், ‘‘மறு உத்தரவு வரும் வரை வேற்று மத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்” என திருமலை தேவஸ்தானத்திற்கு இடைக்கால தடை விதித்தது அதேநேரம், தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுக்கும் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் விளக்கம் அளிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x