Published : 17 Jan 2024 04:27 AM
Last Updated : 17 Jan 2024 04:27 AM

வடமாநிலங்களில் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, ரயில்கள் தாமதம், பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி: வடமாநிலங்களில் உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இதன்காரணமாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன்காரணமாக இந்த மாத தொடக்கத்தில் டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், உறைய வைக்கும் குளிர் நீடிப்பதால் இந்த வாரம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிஹாரில் வரும் 20-ம் தேதி வரை, 1 முதல் 8-ம்வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான வடமாநிலங்களில் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த மாநிலத்தின் சில பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படுகின்றன.

பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 10 விமானங்கள் வேறுவிமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வடமாநிலங்கள் முழுவதும் சுமார் 150 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

விமானங்கள் தாமதம்: இதே நிலை நேற்றும் நீடித்தது. டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக நேற்று 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “பனிமூட்டம் காரணமாக டெல்லியில் மட்டும் 16-ம் தேதி (நேற்று) 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 100 விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம்ஏற்பட்டது. ஏராளமான விமானங்கள் ஜெய்ப்பூர், மும்பைக்கு திருப்பிவிடப்பட்டன’’ என்றனர்.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘டெல்லியில் அதிகாலை முதல் காலை 9 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன்காரணமாக விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, சென்னை விமான நிலையங்களில் அவசரகால கட்டுப்பாட்டு அறைகளை தொடங்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, “வடமாநிலங்களில் அதிகாலை முதல் காலை 9 மணி வரை நீடிக்கும் பனிமூட்டத்தால் விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 16-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் 30 விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது’’ என்று தெரிவித்தன.

டெல்லியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறும்போது, “பனிமூட்டம் காரணமாக சுமார் 100 மீட்டர் தொலைவு வரை எதுவுமே தெரிவதில்லை. இதனால் விபத்துகள் நேரிடுகின்றன. காலை8 மணி வரைகூட முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை ஓட்டுகிறோம்" என்றனர்.

இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லி, உத்தர பிரதேசம், பிஹார், பஞ்சாப், ஹரியாணா, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர் அலை நீடிக்கும். இரவு, அதிகாலையில் 4 முதல் 11 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். பகலில் 24 செல்சியஸ் வரை வெப்பநிலை நீடிக்கும். வடமாநிலங்களில் கடும்குளிர் ஜனவரி 21-ம் தேதி வரை நீடிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் இரவில் மைனஸ் 5 செல்சியஸ், லடாக்கின் லே பகுதியில் மைனஸ் 9 செல்சியஸ் வெப்பநிலை நீடிக்கிறது. இதேபோல இமாச்சல பிரதேசத்தின் சிம்லா, மணாலி, உத்தராகண்டில் டேராடூன், உத்தரகாசி, நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் 2 செல்சியஸ் வெப்ப நிலை நீடிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x