Published : 11 Jan 2024 06:55 PM
Last Updated : 11 Jan 2024 06:55 PM

இஸ்ரோவுக்கு 2023-க்கான ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருதை வழங்கியது மத்திய அரசு

புதுடெல்லி: 2023-ம் ஆண்டுக்கான ‘சிறந்த சாதனையாளர்’ பிரிவில் ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் ஜிதேந்திர சிங் வழங்கினார்.

2023-ம் ஆண்டுக்கான ‘சிறந்த சாதனையாளர்’ என்ற பிரிவில் ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ), மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வழங்கினார். தேசிய தொலைக்காட்சி சேனல் நிறுவிய இந்த விருதை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல் ஆகியோர் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் பெற்றுக் கொண்டனர். விண்வெளி ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதில் இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

"2023-ம் ஆண்டு சந்தேகத்துக்கு இடமின்றி இஸ்ரோ சவால்களை எதிர்கொள்வதில் ஈடு இணையற்ற ஆற்றலையும் மீள்திறனையும் வெளிப்படுத்திய காலமாக வரலாற்றுப் புத்தகங்களில் பொறிக்கப்படும். 2023-ம் ஆண்டில் இஸ்ரோவின் சாதனைகளின் உச்சமாக, சந்திரயான் -3 நிலவின் அறியப்படாத தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக மென்மையாக தரையிறங்கியது" என விருதுக்கான குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சந்திரயான்-3 உள்நாட்டில் உருவாக்கப்பட்டதோடு, சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது என்றும் கூறினார். ஆதித்யா செலுத்தப்படுவதைக் காண 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனர், அதே எண்ணிக்கையில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய போதும் மக்கள் இருந்ததாக அவர் கூறினார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளித் துறையில் ஒரே ஒரு புத்தொழில் நிறுவனம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 190 தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x