Published : 10 Jan 2024 06:46 AM
Last Updated : 10 Jan 2024 06:46 AM

பிரிவினையின்போது லட்சத்தீவை பாகிஸ்தான் கைப்பற்றும் முயற்சியை 2 தமிழர்களின் உதவியுடன் முறியடித்தார் சர்தார் வல்லபபாய் படேல்

சர்தார் வல்லபபாய் படேல் மற்றும் ராமசாமி முதலியார், லட்சுமண சுவாமி முதலியார்.

புதுடெல்லி: பாகிஸ்தான் பிடியில் சிக்காமல் லட்சத்தீவை, 2 தமிழர்கள் மீட்ட வரலாறு தற்போது நெகிழ்வுடன் நினைவுகூரப்படுகிறது.

கேரளா அருகே அரபிக் கடலில் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு அமைந்துள்ளது. அங்கு 36 அழகிய தீவுகள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு சென்றார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டார். இதன்காரணமாக கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக லட்சத்தீவு மாறியது.

அந்த தீவு அருகே அமைந்துள்ள மாலத்தீவு நாடு முழுமையாக சுற்றுலா துறையை நம்பியிருக்கிறது. பிரதமர் மோடியின் பயணத்தால் லட்சத்தீவு மிகப்பெரிய சுற்றுலாதலமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் மாலத்தீவை சேர்ந்தஅமைச்சர்கள், ஆளும் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை அநாகரிகமாக விமர்சித்தனர். இது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய போராக வெடித்தது.

மாலத்தீவை புறக்கணிக்குமாறு சமூகவலைதளங்கள் வாயிலாக இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி மாலத்தீவு ஓட்டல்களில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வோரில் இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கும் நிலையில் அந்த நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. அதேநேரம் ஒட்டுமொத்த உலகம், இந்தியர்களின் கவனமும் லட்சத்தீவு மீது திரும்பியிருக்கிறது.

இந்த நேரத்தில் லட்சத்தீவை 2 தமிழர்கள் மீட்ட வரலாறு இப்போது நெகிழ்வுடன் நினைவுகூரப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த லட்சத்தீவை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சி செய்தது. பாகிஸ்தான் கொடியுடன் ஒரு கப்பல் லட்சத்தீவுக்கு விரைந்தது.

இதையறிந்த இந்தியாவின் இரும்புமனிதர் சர்தார் வல்லபபாய் படேல், மைசூரின் கடைசி திவானும் தமிழருமான ராமசாமி முதலியார், அவரது தம்பி லட்சுமண சுவாமி முதலியாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சர்தார் படேலின் அறிவுரைப்படி முதலியார் சகோதரர்கள், திருவிதாங்கூர் போலீஸார், மக்களை அழைத்து கொண்டு லட்சத்தீவுக்கு சென்று அங்குஇந்திய தேசிய கொடியை ஏற்றினர். அதற்குள் இந்திய கடற்படை போர்க்கப்பலும் லட்சத்தீவுக்கு விரைந்து வந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் பிடியில் சிக்காமல் லட்சத்தீவு தப்பியது.

இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடியும் தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி ஒலிபரப்பான மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நாட்டின் முதல் உள்துறை அமைச்சர்சர்தார் வல்லபபாய் படேல் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க பணியில் ஹைதராபாத், ஜூனாகத் உள்ளிட்ட பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதில் அவர் அதிக கவனம் செலுத்தினார்.

இந்தியாவின் பெரிய பிராந்தியங்களை மட்டுமல்ல மிகச் சிறிய லட்சத் தீவை இணைப்பதிலும் படேல் முக்கிய பங்காற்றினார். கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நமதுஅண்டை நாடு (பாகிஸ்தான்) லட்சத் தீவு மீது கண் வைத்தது. பாகிஸ்தான் கொடி பறந்த கப்பல் லட்சத்தீவு நோக்கி விரைந்தது.

இதுகுறித்து சர்தார் படேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஒருநிமிடத்தைகூட வீணாக்கவில்லை. உடனடியாக ஆற்காடு ராமசாமி முதலியார், ஆற்காடு லட்சுமண சுவாமி முதலியாரை தொடர்பு கொண்டு பேசினார். திருவிதாங்கூர் (கேரளா) மக்களை அழைத்து கொண்டு லட்சத்தீவுக்கு சென்று அங்குஇந்திய தேசிய கொடியை ஏற்ற அறிவுறுத்தினார்.

படேலின் அறிவுரையை ஏற்று ஆற்காடுமுதலியார் சகோதரர்கள் லட்சத்தீவுக்கு விரைந்து சென்று அங்கு இந்திய தேசியகொடியை ஏற்றினர். அதன்பிறகு லட்சத்தீவின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலியார் சகோதரர்களுக்கு சர்தார் படேல் உத்தரவிட்டார். இன்று லட்சத்தீவு இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. மிகச் சிறந்த சுற்றுலா தலமாகவிளங்குகிறது. இந்திய மக்கள் லட்சத்தீவுக்கு ஒருமுறையாவது சுற்றுலா செல்லவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

லட்சத் தீவை மீட்ட ஆற்காடு ராமசாமி முதலியார், நீதிக் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அவரது தம்பி மருத்துவர் லட்சுமண சுவாமி முதலியார், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் துணை வேந்தராக பணியாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x