Published : 26 Dec 2023 05:55 AM
Last Updated : 26 Dec 2023 05:55 AM

ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர், உணவு வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கொச்சி: ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சபரிமலை செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெரிசலை குறைக்க வைக்கம் பகுதியிலேயே பக்தர்களின் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதை கண்டித்து பக்தர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. ஆங்காங்கே ஐயப்ப பக்தர்கள் குடிநீர், உணவு இன்றி தவிப்பதாக மின்னணு ஊடகங்கள், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த செய்திகளை அடிப்படையாக வைத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தவழக்கு நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், கிரிஷ் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் சிறாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐயப்ப பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள இடங்களில் அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வகைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் போலீஸாரும் இணைந்து போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களால் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. இதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து கேரள போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாள்தோறும் சுமார் 90,000 பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். சுமார் 10,000 பேர் சபரிமலைக்கு வந்து முன்பதிவு செய்கின்றனர். சுமார் 20,000 பேர் எவ்வித முன்பதிவும் செய்யாமல் நுழைகின்றனர். இதனால் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. முன்பதிவு செய்யாமல் வருபவர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்தன.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை 1.2 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வாகனங்கள் நிறுத்தும் வசதியை விரிவுபடுத்தி உள்ளோம். முதலில் சுமார் 7,000 வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 8,000-ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரசாந்த் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x