Last Updated : 16 Jan, 2018 09:42 AM

 

Published : 16 Jan 2018 09:42 AM
Last Updated : 16 Jan 2018 09:42 AM

நாதுராமின் 33 நாள் தலைமறைவு வாழ்க்கை: 50 சிம், 12 மொபைல்களுடன் 5 மாநிலங்கள்

ஜோத்பூர் ராமாவாஸ் கிராமத்தில் இருந்து டிசம்பர் 13-ல் தப்பிய நாதுராம் 33 நாள் தலைமறைவாக இருந்துள்ளார். அப்போது 5 மாநிலங்கள் சுற்றியவர் 12 மொபைல்களில் சுமார் 50 சிம் கார்டுகள் போட்டு பயன்படுத்தி உள்ளார்

சென்னை படையினரிடம் இருந்து தப்பிய நாதுராம் ராஜஸ்தானில் இருந்து நேராக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தப்பியுள்ளார். இங்கு சில நாட்கள் இருந்த பின் அருகிலுள்ள மத்தியபிரதேசத்திற்கு தப்பி விட்டார். பிறகு குஜராத்திற்கு வந்தபோது அவரை பாலி போலீஸ் பிடித்துள்ளது. இந்த தலைமறைவு வாழ்க்கையின் போது ஓட்டல்களில் தங்குவதை நாதுராம் தவிர்த்துள்ளார். கோயில்கள், மடங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் விடுதிகள் ஆகியவற்றில் தங்கியுள்ளார். சென்னை மற்றும் ராஜஸ்தான் போலீஸ் படைகளிடம் சிக்கி விடாதபடி அவரது நடவடிக்கைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாலி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான ஜோதிஷ்வர்ஸ்வரூப் கூறும்போது, ‘‘நாதுராமிடம் 12 மொபைல்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பேசவேண்டி, போலி விலாசங்களுடன் கூடிய சுமார் 50 சிம்களை பயன்படுத்தியுள்ளார். தன் செலவிற்கு பணம் தேவைப் படும்போது உறவினர்களுக்கு போன் செய்து அவர்களை தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து பெற்றுள்ளார். இதற்காக மட்டும் தான் தங்கிய இடங்களில் பொதுமக்களிடம் இரவல் கேட்டு போன் செய்திருக்கிறார். எனவே, கொள்ளையடித்த நகைகளை தம் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருக்க வாய்ப்புள்ளது’’ எனத் தெரிவித்தார்.

சென்னை படையினரிடம் இருந்து தப்பிய நாதுராம், பல மாநிலங்கள் சுற்றிய பின் கடைசியாக அகமதாபாத் வந்து ஒளிந்துள்ளார். தன் ஆன்ட்ராய்டு கைப்பேசியில் பல்வேறு எண்களை மாற்றிய நாதுராம் அதில் முகநூலையும் பயன்படுத்தியுள்ளார். இது, சைபர் பிரிவினரிடம் அவர் சிக்க ஒரு முக்கியக் காரணமாகி உள்ளது. இதில் கடந்த வாரம் போலீஸருக்கு சவால் விடும் விதமாக கையில் துப்பாக்கியுடன் தனது படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தான். பிறகு அடுத்த சில நாட்களில் அதை அகற்றிய போதும் சைபர் பிரிவின் கண்காணிப்பில் நாதுராம் சிக்கினார்.

நாதுராம் மீது சென்னைக்கு முன்னதாக கர்நாடகா, ஆந்திராவிலும் கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. பெரிய பாண்டியன் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின் வெளிச்சத்திற்கு வந்த நாதுராம் குறித்து ஆந்திரா, கர்நாடகா காவல்துறையினரும் பாலி போலீஸாரை அணுகியுள்ளனர். வழிப்பறி மற்றும் மிரட்டல் வழக்குகள் நாதுராம் மீது ராஜஸ்தானில் பதிவாகி உள்ளன. இத்துடன் மொத்தம் சுமார் 50 வழக்குகள் நாதுராம் மீது பதிவாகி இருக்கலாம் என தெரிகிறது. 3 மாநிலப் போலீஸாரும் நாதுராமை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து சென்று விசாரணை நட்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x