Last Updated : 09 Jan, 2018 08:37 AM

 

Published : 09 Jan 2018 08:37 AM
Last Updated : 09 Jan 2018 08:37 AM

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது 4-வது குண்டு எதுவும் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

மகாத்மா காந்தியை சுட்ட வழக்கில் 4-வது குண்டு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. கோட்சே தவிர வேறொருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி 30.1.1948-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “காந்தி சுடப்பட்ட போது அவர் மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. கோட்சே சுட்டது 3 குண்டுகள்தான். நான்காவது குண்டு எங்கிருந்து வந்தது என்பது குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை. அந்த 4-வது குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணம். இதில் வெளிநாட்டு சதி உள்ளது. இதுகுறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், அமெரிக்க தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட தந்தி ஆதாரங்களை சமர்ப்பித்து, எழுத்து மூலம் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், “காந்தி கொலை சம்பவம் உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சதி. காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் கோட்சே தவிர மற்றொருவர் சம்பந்தப்பட்டுள்ளார். வெளிநாட்டு அமைப்புக்கு தொடர்புள்ளது” என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்திர சரணுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை பரிசீலித்து இதில் சட்ட ரீதியாக என்ன செய்ய முடியும்? என்று நீதிமன்றம் முடிவெடுக்க உதவும்படி அவருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

சந்தேகம் இல்லை

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “நாதுராம் கோட்சே தவிர வேறொருவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நான்காவது குண்டு பாய்ந்ததில் தான் காந்தி கொல்லப்பட்டார் என்ற வாதத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. காந்தி கொலையில் வெளிநாட்டு சதி இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. காந்தி மரணத்துக்கு காரணமான குண்டு, துப்பாக்கி, சுட்டவர், சதி, சதிக்குப் பின்னால் இருந்த சித்தாந்தம் ஆகிய அனைத்தும் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதில் சந்தேகம் எழுப்பவோ, மறு விசாரணை நடத்தவோ, வேறு விசாரணை ஆணையம் அமைக்கவோ எந்த முகாந்திரமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 4,000 பக்க ஆவணங்கள் மற்றும் இச்சம்பவம் தொடர்பாக 1969-ம் ஆண்டு விசாரணை நடத்திய ஜீவன்லால் கபூர் விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றை முழுமையாக படித்த பின்பு இந்த அறிக்கையை வழக்கறிஞர் அமரேந்திர சரண் தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வு இதன் மீது, அடுத்த விசாரணையின்போது உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x