Published : 25 Jan 2018 02:26 PM
Last Updated : 25 Jan 2018 02:26 PM

கேரள பள்ளியில் மீண்டும் தேசியக்கொடி ஏற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

கேரள மாநிலம் பாலக்காடு பள்ளியில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றி சர்ச்சை ஏற்பட்ட நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குடியரசு தின விழாவில், அங்குள்ள பள்ளியில் அவர் தேசியக்கொடி ஏற்றப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாலக்காட்டில் உள்ள கரங்கியம்மன் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசு உதவி பெறும் அந்தப் பள்ளியில் மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்ற பாலக்காடு மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே சுதந்திர தினத்தின்போது, பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்ற முடியும், அரசியல் தலைவர்கள் கொடியேற்ற அனுமதிக்க முடியாது எனக் கூறி இந்த தடை விதிக்கப்பட்டது.

எனினும் தடையை மீறி, அந்தப் பள்ளியில் மோகன் பகவத், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதே பாலக்காடு பகுதியில் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்றப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் வியாஸ் வித்யாபீட பள்ளியில் நடக்கும் குடியரசு தின விழாவில், பகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர் உட்பட 2,000 பேரும், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 8,000 பேரும் கலந்து கொள்கின்றனர். மேலும் பாலக்காடு மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

பள்ளியில் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றுவதற்கு மாநில அரசின் சார்பில் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இதனை கடுமையாக விமர்சித்துள்ளது. கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் ஆர்எஸ்எஸ் ஈடுபடுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் மோகன் வைத்யா, ''அரசுப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற கேரள அரசு தடை விதித்துள்ளது. மோகன் பகவத் தனியார் பள்ளியில் தான் கொடியேற்றவுள்ளார்'' என விளக்கமளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x