Published : 16 Dec 2023 04:31 PM
Last Updated : 16 Dec 2023 04:31 PM

JN.1 - கேரளாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் தன்மை எத்தகையது? - நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: கேரளாவில் கரோனா வைரஸ் திரிபான BA.2.86-ன் புதிய துணை வகையான JN.1 வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தன்மை, பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் விவரித்துள்ளனர். கேரளாவில் 78 வயதான மூதாட்டியிடம் நவம்பர் 18-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவில், அவருக்கு புதிய துணை வகையான JN.1 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு லோசன காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது என்றும், தற்போது அவர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, திருச்சியில் இருந்து அக்டோபர் 25-ம் தேதி சிங்கப்பூர் சென்ற தமிழருக்கும் JN.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. என்றாலும், திருச்சியிலோ அல்லது தமிழகத்திலோ வேறு எங்கும் பாதிப்புகள் இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் JN.1 வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு ஆய்வக அமைப்புகளுடன் இந்தியாவில் காணப்படும் புதிய கோவிட் 19 திரிபுகளைக் கண்காணித்து வரும் ‘இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம்’ (INSACOG) நிறுவனம், கேரளாவில் தற்போது பரவும் கரோனா வைரஸ் குறித்தும், அதன் பாதிப்புகள் பற்றியும் கண்காணித்து வருகிறது. அந்த அமைப்பின் தலைவர் என்.கே அரோரா கூறுகையில், “இந்த புதிய வகை திரிபானது நவம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது. இது BA.2.86 திரிபின் துணை வகைதான் இந்த JN.1 சப்-வேரியன்ட் வைரஸ்.இது இந்தியாவில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய கண்காணிப்பு முடிவுகளின்படி, இந்த வகை வைரஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கோ, தீவிரமான பாதிப்புகளோ இந்தியாவில் உருவாகவில்லை” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டதுதான் இந்த JN.1 சப்-வேரியன்ட். இதன் தன்மைகள் குறித்து தேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் ‘கோவிட் டாஸ்க் ஃபோர்’ துணைத் தலைவர் ராஜீவ் ஜெயஜீவன் கூறும்போது, “ஏழு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தியாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. கேரளாவில் சிலர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது முன்பு போல பாதிப்பு பற்றிய கவலையை அதிகரித்துள்ளது. வைரஸின் மரபணு மாதிரி வரிசைகள் ஒவ்வொரு பகுதியில் பரவி வரும் வைரஸ்களை சுட்டிக்காட்டி வருகிறது. உதாரணமாக, இந்தியாவில் 2023 ஏப்ரல் மாத கோவிட் அலையின்போது XBB துணை திரிபுகள் கண்டறியப்பட்டன. டிசம்பர் மரபணு வரிசை குறித்த முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், முதல்கட்ட முடிவுகளில் JN.1 பாதிப்பானது கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.

JN.1 வகை வைரஸ் வேகமாக பரவும். அத்துடன், நோய் எதிர்ப்பை குறைத்துவிடும். இது XBB மற்றும் முந்தைய துணை வகைகளில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் மாறுபட்டது. இது, ஏற்கெனவே கோவிட் பாதித்தவர்களையும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகின் பல்வேறு நாடுகளில் JN.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்த பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. உலகின் பிற பகுதிகளுடன் விமானப் போக்குவரத்தில் இந்தியா தொடர்பில் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

புதிய பாதிப்பு எத்தனை பேருக்கு? - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 312 பேர் புதிதாக கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 31-க்கு பின்னர் இதுவே அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். இதன் மூலம் நாட்டில் மொத்த பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,296 ஆக அதிகரித்துள்ளது. கேராளவைப் பொறுத்தவரையில் கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 479 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த மாதம் அந்த எண்ணிக்கை சற்றே அச்சுறுத்தும் வகையில் டிச.8 வரை புதிதாக 825 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அச்சப்படத் தேவையில்லை: இதனிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது “சிங்கப்பூர் மற்றும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது. கேரளாவில் பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத் துறையை, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘கேரளாவில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. மிதமான பாதிப்புகளே உள்ளன’ என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல, சிங்கப்பூரில் 3,000-க்கு மேற்பட்டோர் புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அறிந்து, அங்கு உள்ள மருத்துவர்களுடன் பேசினேன். “இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 நாட்கள் தொடர்ந்து இருமல், தொண்டைவலி இருக்கிறது. பின்னர் பாதிப்பு சரியாகிவிடுகிறது” என்று சிங்கப்பூர் மருத்துவர்கள் கூறினர். எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்.

தமிழகத்தில் அரசு சார்பில் 78 இடங்களிலும், தனியார் சார்பில் 253 இடங்களிலும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையம் உள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 14-ம் தேதி 264 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 8 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பரவும் தொற்று, எந்த வகையான கரோனா உருமாற்றம் என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x