Last Updated : 20 Jan, 2018 04:58 PM

 

Published : 20 Jan 2018 04:58 PM
Last Updated : 20 Jan 2018 04:58 PM

மாயமாகும் சில்வர் ஸ்பூன், டம்ளர்கள்: பெங்களூரு இந்திரா கேன்டீன் ஊழியர்கள் புலம்பல்

பெங்களூரு மாநகராட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் இந்திரா கேன்டீன்களில் சாப்பிடவரும் மக்கள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் சில்வர் ஸ்பூன், டம்ளர்களை அபகரித்து சென்று விடுவதால், அங்குள்ள ஊழியர்கள் புலம்புகின்றனர்.

காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் இந்திரா கேன்டீன் தொடங்கப்பட்டது.

இங்கு மக்களுக்கு மானிய விலையில் சுவையான உணவுகள், தரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் இந்த இந்திரா கேண்டீன் சேவை விரிவு படுத்தப்பட்டது.

இந்திரா கேண்டீனுக்கு சாப்பிட வரும் மக்கள், சாப்பாட்டை ருசித்தபின், அங்கு பரிமாற வைத்து இருக்கும் சில்வர்(ஸ்டீல்) ஸ்பூன், ஸ்டீல் டம்ளர்களையும் சமீபகாலமாக திருடிச் சென்று விடுகின்றனர். இது ஒரு கேன்டீனுக்கு மட்டும் நடந்தால், பரவாயில்லை, அனைத்து இந்திரா கேண்டீன்களிலும் இதே நிலை நீடிப்பதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் புலம்புகின்றனர்.

பெங்களூரு வசந்தநகரில் செயல்பட்டு வரும் இந்திரா கேன்டீனுக்கு 600 சில்வர் ஸ்பூன்கள் சப்ளை செய்யப்பட்டது. ஆனால், இப்போது ஒரு ஸ்பூன் கூட இல்லை என ஊழியர் ஒருவர் புலம்புகிறார்.

இது குறித்து தி இந்துவிடம் கேன்டீன் ஊழியர் ஒருவர் கூறுகையில், “ இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நாங்கள் வைத்திருக்கும் ஸ்பூன், டம்ளர் அனைத்தும் திடீரென மாயமாகிவிடுகிறது. இங்கு வரும் யாரையும் குற்றம் சொல்லமுடியவில்லை. எங்களுக்கு உணவு சப்ளை செய்யும், மூத்த அதிகாரிகளிடம் இந்த விவகாரம் குறித்து தெரிவித்துவிட்டோம்.

சுப்ரமணியம் நகரில் உள்ள இந்திரா கேன்டீனில் 250 ஸ்பூன்கள் வைத்து இருந்தோம், அதில் 180 ஸ்பூன்களைக் காணவில்லை. ஸ்டீல் டம்ளர்களையும் காணவில்லை. நல்லவேளை சாப்பிடும் தட்டு பெரியதாக இருப்பதால், அதை யாரும் எடுத்துச் செல்லவில்லை, இல்லாவிட்டால், அதுவும் காணாமல் போய் இருக்கும்” என புலம்பினார்.

பெங்களூரு மேயர் ஆர்.சம்பத் ராஜ் கூறுகையில், “ கேன்டீன்களில் கண்காணிப்பு கேமிரா வைத்திருந்தும் இப்படி ஸ்பூன்கள், டம்ளர்களை சாப்பிட வரும்மக்கள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். இது மிகவும் வேதனைக்கு உரியது” எனத் தெரிவி்ததார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x