Published : 15 Dec 2023 02:19 PM
Last Updated : 15 Dec 2023 02:19 PM

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு - மோடி, அமித் ஷா பங்கேற்பு

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பஜன்லால் சர்மா தனது 56-வது பிறந்தநாளான இன்று (டிச.15) முதல்வராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது. இதையடுத்து இன்று ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா பங்கேற்றனர். மேலும், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

முதல்முறை எம்எல்ஏ பஜன்லால்: முதல்வராக பதவியேற்றுள்ள பஜன்லால் சர்மா, முதல்முறையாக எம்எல்ஏ ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ராஜஸ்தானின் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர். இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் முக்கிய பதவிகளை வகித்தார். அரசியல் அறிவியல் ( political science) துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.

துணை முதல்வராக பதவியேற்றுள்ள தியா குமாரி, ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த இரண்டாம் மான் சிங்கின் மகன் பவானி சிங்கின் ஒரே மகள் ஆவார். இவர் ராஜபுத் (ஓபிசி) சமூகத்தை சேர்ந்தவர். இன்னொரு துணை முதல்வர் பிரேம் சந்த் பைரவா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். முதல்வர் பஜன்லால் சர்மா, பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x