Published : 15 Dec 2023 05:51 AM
Last Updated : 15 Dec 2023 05:51 AM

மக்களவை அத்துமீறல் | ‘பகத் சிங் பேன் கிளப்' சமூக வலைதளம் மூலம் நண்பர்களாகி சதித் திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்து மீறல் சம்பவத்துக்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பே சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம், அமோல் ஷிண்டே, விஷால் சர்மா, லலித் ஜா ஆகிய 6 பேரும் ‘பகத் சிங் பேன் கிளப்' என்ற சமூகவலைதளத்தின் மூலம் நண்பர்களாகி உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 6 பேரும் கர்நாடகாவின் மைசூருவில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மீண்டும் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசித்து உள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தின் தொடக்க நாளின்போதே வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளராக நுழைய அனுமதி சீட்டு கிடைக்காததால் அன்றைய தினம் தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டது.

கடந்த டிசம்பர் 10-ம் தேதி 6 பேரும் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். அன்றைய தினம் சதித் திட்டம் இறுதி செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தாக்குதலை நடத்துவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாக சோதனை நடைமுறைகளை இவர்கள் உன்னிப்பாக நோட்டம் பார்த்துள்ளனர். அப்போது காலில் அணிந்திருக்கும் ஷூக்கள் பரிசோதனை செய்யப்படுவது இல்லை என்பது அறிந்து, ஷூக்கள் மூலம் வண்ண புகை குப்பிகளை கடத்திச் சென்றுள்ளனர்.

லலித் ஜாவை தேடும் போலீஸ்: இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பிஹாரை சேர்ந்த லலித் ஜா மட்டும் தலைமறைவாக உள்ளார். தாக்குதல் நடத்தியவர்களின் செல்போன்கள் அவரிடம் உள்ளன. அந்த செல்போன்களை ஆய்வு செய்தால் தாக்குதலுக்கான உண்மையான காரணம் தெரியவரும். கடைசியாக ராஜஸ்தானில் லலித் ஜா முகாமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவரை தேடி வருகிறோம் என்றுஅந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

150 காலி பணியிடங்கள்: நாடாளுமன்ற பாதுகாப்பு உபகரணங்கள் கடந்த 2004-ம் ஆண்டில் வாங்கப்பட்டன. இவை 19 ஆண்டுகள் பழமையானவை. நாடாளுமன்ற பாதுகாப்பு படையில் 150 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாதுகாப்புப் படையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x