Published : 13 Dec 2023 02:26 PM
Last Updated : 13 Dec 2023 02:26 PM

“பாஜகவுக்கு மக்களின் தேர்வு முக்கியம் அல்ல” - 3 புதிய முதல்வர்களின் ஆர்எஸ்எஸ் பின்னணி மீது காங். விமர்சனம்

பிரதமர் மோடி முன்னிலையில் மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்ற மோகன் யாதவ்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய முதல்வர்களாக புதிய முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் “மாநில அதிகாரங்களுக்கு பாஜக முடிவு கட்டுகிறது” என்று காட்டமாக கூறியுள்ளது.

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து ஆட்சியைத் தட்டிப்பறித்த பாஜக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. வெற்றி பெற்ற மாநிலங்களின் புதிய முகங்களை முதல்வர்களாக்குவது குறித்து மத்திய பாஜக தீவிரம் காட்டி வந்தது. அதன்படி ஒரு வாரகால நீண்ட சஸ்பென்ஸ்களுக்கு பின்பு, சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாயும், மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவும், ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மாவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், “முதல்வர்களாக இந்தப் புதிய முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சில காரணங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் வலுவான ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி பின்னணி கொண்டவர்கள்” என்று காங்கிரஸ் கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், "இது பாஜகவின் உட்கட்சி விவகாரம் என்றாலும், இந்தத் தேர்வுகள் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்பதை காட்டுகின்றது. இந்த முதல்வர்கள் தேர்வு முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று. மோடி மற்றும் அமித் ஷாவின் விருப்பம் மட்டுமே முக்கியமானது. மக்களின் தேர்வும், எம்எல்ஏக்களின் விருப்பமும் முக்கியமில்லை. இது மோடி, அமித் ஷாவின் உச்சம்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் 5 காரணங்களை அடுக்கியுள்ளார். “மூன்று மாநில முதல்வர் தேர்வு பாஜகவில் மாநில ஆளுமை முடிவுக்கு வந்துள்ளதைக் காட்டுகிறது. மோடியை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படுவார்கள், டெல்லியில் இரண்டு பேரின் முடிவுகள் தான் முதன்மையானதாக இருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏகளின் முடிவுகள் முக்கியமில்லை. இந்த முதல்வர்களும் அசாம், குஜராத் முதல்வர்களைப் போல பொம்மைகளாக இயக்கப்படுவார்கள். பாஜகவில் முற்றிலுமாக ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். மேலும் “அத்வானி, ஜோஷி, சின்ஹா போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ள முடிந்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா!” என்று கேலியும் செய்துள்ளார்.

அதேபோல் மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ், “ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மாவின் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அம்மாநில முன்னாள் முதல்வரும், இந்த முறையும் முதல்வர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் முன்னோடியுமான வசுந்தரா ராஜே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்குடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ராஜ்நாத் சிங்குடன் பேசிக்கொண்டிருக்கிறார் வசுந்தரா ராஜே. அவர் கையில் இருந்த துண்டுச் சீட்டில் முதல்வர் பொறுப்புக்கு பஜன்லால் பெயர் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. புதிய முதல்வரின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பேசிய அம்மாநில முதல்வர் தேர்வுக்கான மத்திய பார்வையாளர்கள் குழுவில் அங்கம் விகித்த ராஜ்நாத் சிங், பஜன்லாலின் பெயரை வசுந்தரா ராஜேவே முன்மொழிந்தார் என்றார்.

முன்னதாக, பாஜக வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் சத்தீஸ்கரில் பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு முன்னாள் முதல்வர் ராமன் சிங் சபாநாயகராக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சியை வழிநடத்திய சிவ்ராஜ் சிங் சவுகானுக்குப் பதிலாக மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கான போட்டியில் வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் ராம்மேக்வால், சி.பி.ஜோஷி, சாமியார் பாலக்நாத், தியா குமாரி உள்ளிட்டோர் முன்வரிசையில் இருந்த நிலையில், புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். தியா குமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x