Last Updated : 13 Dec, 2023 06:25 AM

 

Published : 13 Dec 2023 06:25 AM
Last Updated : 13 Dec 2023 06:25 AM

டெல்லி ஜே.என்.யு. வளாகத்தில் திருவள்ளுவர் சிலை: பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ தகவல்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என துணைவேந்தர் சாந்திஸ்ரீ து.பண்டிட் அறிவித்தார்.

இந்தியாவில் முற்போக்கு சிந்தனை மிக்க பல்கலைக்கழகமாகக் கருதப்படுவது டெல்லி ஜேஎன்யு. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இதில் பயிலும் மாணவர்கள் சிவப்பு சிந்தனையாளர்களாக உருவாகி விடுவதாகவும் ஒரு கருத்து நிலவியது. இங்கு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் வடக்கு மற்றும் தென் மாநில மாணவர்கள் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகப் புகார்கள் உண்டு. இதை போக்கும் முயற்சியில் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு அங்கு நடைபெற்ற பாரதி பிறந்தநாள் விழாவில் வெளியானது.

மத்தியப் பல்கலைக்கழகமான இதன் சிறப்புநிலை தமிழ்த்துறை சார்பில் மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதியின் பிறந்த நாளை, இந்திய மொழிகள் தினமாக நாடு முழுவதிலும் கொண்டாட வேண்டும் என கடந்த வருடம் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது. இதுவும் நேற்று முன்தினம் ஜேஎன்யுவில் கடைப்பிடிக்கப்பட்டது.

பாரதி பிறந்தநாள் விழாவில் மத்திய அரசின் முதன்மைச் சட்ட ஆலோசகர் இரா.வெங்கடரமணி, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதில், பாரதியாரின் திருவுருப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

விழாவில் ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ து.பண்டிட் பேசும்போது, “ஜேஎன்யு பல்கலைக்கழகம் வடக்கு, தெற்கு எனும் வேறுபாடுகளைக் கடந்து இந்தியாஎனும் நிலையில் இயங்க வேண்டும். இதனைப் பறைசாற்றும் விதமாக விரைவில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது” என்றார்.

இந்திய அரசின் முதன்மைச் சட்ட ஆலோசகர் இரா. வெங்கடரமணி பேசுகையில், “வாழிய பாரத மணித்திரு நாடு எனப்பாடி இந்திய ஒற்றுமையை தன் பாடல்களில் பாரதி வலியுறுத்தினார். பாரதியின் பாடல்களில் பெண் விடுதலை, சமத்துவம் ஆகியன வெளிப்பட்டன. பாரதியின் இக்கொள்கைகளையே நீதிமன்றங்கள் இன்றளவும் நிறைவேற்றி வருகின்றன” எனக் குறிப்பிட்டார்.

சிறப்புரையாற்றிய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி. வெ.இராமசுப்பிரமணியன், “பாரதி 7 மொழிகள் அறிந்தவர், தான் வாழ்ந்த குறுகிய காலத்திலேயே ஊடகவியலாளர், கட்டுரையாளர், விடுதலைப் போராட்ட வீரர், புலவர், ஆசிரியர் உள்ளிட்ட பல அவதாரங்களை எடுத்தவர். கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவற்றை பாரதி சிறப்புற எடுத்துரைத்தார். பாரதியின் படைப்புகளில் ‘பாஞ்சாலி சபதம்’ தனித்தன்மை வாய்ந்தது ஆகும். பாரதியின் அளவுக்கு ‘அத்வைதத்தை’ உள்வாங்கியவர்கள் யாருமில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x