Published : 12 Dec 2023 08:16 AM
Last Updated : 12 Dec 2023 08:16 AM

தஞ்சாவூர் நகரம் உண்மையிலேயே மிகவும் அழகு: அமெரிக்க நடிகரின் பதிவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

அமெரிக்க நடிகர் மைக்கேல் டக்ளஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம்.

புதுடெல்லி: பிரபல ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டக்ளஸ் ஆஸ்கர், கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர். இவர் அண்மையில் கோவாவில் நடைபெற்ற 54-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்றிருந்தார்.

அவருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இந்த விருதை பெறுவதற்காக மைக்கேல் டக்ளஸ் தனது மனைவி கேத்தரின், மகன் டைலன் ஆகியோருடன் இந்தியா வந்தார். திரைப்பட விழாவில் பங்கேற்ற மைக்கேல் டக்ளஸ், இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டார்.

அதன் ஒருபகுதியாக தமிழகத்துக்கு வருகை தந்த அவர் தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட்டு மகிழ்ந்தார். தஞ்சை பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற மைக்கேல் டக்ளஸ் தமிழர்களின் பாரம்பரிய கட்டிடக்கலையை பார்த்து ரசித்தார்.

அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்த பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் நகரம் உண்மையிலேயே அழகு. மேலும், இந்தியாவில் பார்க்க இன்னும் எத்தனையோஇடங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியாவிலுள்ள சுற்றுலாத் தலங்கள், உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை மயக்குகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் டக்ளஸ் கூறியிருப்பதாவது:

திரைப்படத் தயாரிப்பு மற்றும் நிதித் துறையில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. உலகம் முழுவதும் பாரட்டத்தக்க வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள் சிறப்பானதாக உள்ளன. இந்தத் திரைப்பட விழாவில் 78 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சாதி, மதம், இனம் கடந்து திரைப்படங்கள்தான் மக்களை ஒன்றிணைக்கின்றன. கலைக்கு மொழி தேவையில்லை. அனைத்துதிரைப்படங்களையும் எங்கு வேண்டுமானாலும் திரையிட முடியும். திரைப்படம் மூலம் மக்களை நாங்கள் சென்றடைகிறோம். திரைப்படங்கள் மூலம் உலகில் எங்கிருந்தாலும் பார்வையாளர்கள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள். திரைப்படங்கள் எங்களை நெருக்கமாக்குகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x