Last Updated : 06 Dec, 2023 07:34 AM

 

Published : 06 Dec 2023 07:34 AM
Last Updated : 06 Dec 2023 07:34 AM

மம்தா, நிதிஷ், அகிலேஷ் வரமுடியாததால் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தள்ளிவைப்பு

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த இண்டியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இக்கூட்டம் தனது வீட்டில் நடைபெற இருப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்திருந்தார். ஆனால் இக்கூட்டத்துக்கு வரமுடியாத நிலையில் இருப்பதாக பல தலைவர்கள் தெரிவித்தனர்.

திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தை தவிர்த்தனர். தமிழக ஆளும் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின், வெள்ளம் காரணமாக தம்மால் வரமுடியாது எனவும் தனது கட்சி சார்பில் தலைவர்களை அனுப்புவதாகவும் தகவல் அளித்திருந்தார். இதுபோன்ற காரணங்களால், காங்கிரஸால் அறிவிக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் கூட்டணியின் பல தலைவர்கள் காங்கிரஸுக்கு அளிக்கும் அழுத்தம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், 5 மாநில தேர்தலுக்கு முன்பாக மும்பையில் இண்டியா கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான கூட்டணிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் திட்டமிடப்பட்டிருந்தது. கூட்டணி ஒருங்கிணைப்பாளரை அமர்த்தவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் 5 மாநில தேர்தலுக்குப் பின் இதை செய்வது காங்கிரஸின் திட்டமாக இருந்தது. இந்த 5 மாநிலங்களில் தங்களுக்கு கிடைக்கும் வெற்றியால், தங்கள் கட்சிக்கானப் பங்கை அதிகரிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் இதற்கான வாய்ப்பை காங்கிரஸ் தற்போது இழந்து நிற்கும் சூழல் உருவாகி விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இண்டியா கூட்டணியின் உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு அழுத்தம் அளிக்க முயற்சிக்கின்றன.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் தலைவருமான மம்தா, இதர கட்சிகளின் யோசனையுடன் தொகுதி பங்கீடு செய்ய வலியுறுத்தி உள்ளார். சமாஜ்வாதி தலைவரான அகிலேஷ், உறுதியான முக்கியக் கட்சியே இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு முடிவை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார், இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை முன்னிறுத்த விரும்புவதாகத் தெரிகிறது. இதன்மூலம், இண்டியா கூட்டணி கட்சிகளின் மீது தங்கள் கட்சியின் கை ஓங்கியிருக்கும் என்பதும் அவரது நம்பிக்கையாக உள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளை காங்கிரஸும் எதிர்பார்த்திருந்தது. 3 மாநிலங்களில் தோல்வி பற்றி ஆலோசிப்பதை விட இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்திருந்தது. இருப்பினும், 3 மாநிலங்களில் அடைந்த தோல்வியால் காங்கிரஸுக்கு இண்டியா கூட்டணியில் முக்கியத்துவம் குறைந்துள்ளது. இதனால், இண்டியா கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தை சமாளிப்பது காங் கிரஸுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x