Published : 04 Dec 2023 05:30 AM
Last Updated : 04 Dec 2023 05:30 AM

தெலங்கானாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி: ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராக பதவியேற்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி தெலங்கானா உருவானதற்கு காங்கிரஸே காரணம். ஆனால், மாநிலம் உதயமானது முதற்கொண்டு, பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து தெலங்கானாவின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இறுதியாக காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், எம்.ஐ.எம் கட்சி 7 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று காலை 10 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில் முதல்வராக பதவி பிரமாணம் செய்ய உள்ளார். மேலும், இவருடன் பட்டி விக்ரமார்கம் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இவர்களுக்கு ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதனையொட்டி, நேற்று இரவு ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடி, ஒருமனதாக ரேவந்த் ரெட்டியை அதன் தலைவராக ஏற்றது.

இதற்கிடையில் சந்திரசேகர ராவ், நேற்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x