Published : 03 Dec 2023 07:05 PM
Last Updated : 03 Dec 2023 07:05 PM

ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி; காங். வசமானது தெலங்கானா... 3-1 முடிவுகள் சொல்வது என்ன?

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான செமி ஃபைனல்ஸ்.. இப்படியொரு அறிமுகத்தோடுதான் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியது. தேசமே எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதில் 4-ல் 3 மாநிலங்களை பாஜகவின் வெற்றிக் களமாக்கிக் கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது பாஜக. அத்துடன் சத்தீஸ்கர், ராஜஸ்தானை காங்கிரஸிடமிருந்து பாஜக பறித்துக் கொண்டுள்ளது. இழப்பென்று ஏதுமில்லை. காங்கிரஸ் வெற்றித் தடம் பதித்துள்ள தெலங்கானாவிலும் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், சிறப்பாக ஏற்றம் கண்டுள்ளது பாஜக. இவையெல்லாம் உணர்த்துவது என்ன?

சாதித்த மாமாஜி! - மத்தியப் பிரதேசத்தில் கடந்த 1993 மற்றும் 1998 தேர்தலில் காங்கிரஸின் திக்விஜய் சிங் தலைமையில் அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததற்கு பின்னர் காங்கிரஸிடமிருந்து மாநிலத்தை தட்டிப் பறித்த பாஜக 2003-ம் ஆண்டிலிருந்து தனது வேரை மத்தியப் பிரதேசத்தில் ஆழமாக ஊன்றியுள்ளது. அதற்கு பின்னர் நடந்த நான்கு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் நீண்ட கால ஆட்சி, கால மாற்றம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இந்த முறை பாஜகவிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்கும் எண்ணத்துடனும், அடுத்த ஆண்டு வர இருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டும் பெரும் நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. ஆனால், 167 தொகுதிகளில் முன்னிலை என இமாலய வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது பாஜக. ஆட்சிக்கு எந்த எதிர்ப்பலையும் இல்லை என்பதை பாஜக நிரூபித்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் சிவ்ராஜ் சவுகான்.

சாலை, தண்ணீர், மின்சாரம்: ம.பி. தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுகனின் அயராத உழைப்பால் ம.பி.யில் 5 லட்சம் கிலோ மீட்டர் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 65 ஆயிரம் வீடுகளுக்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. 28,000 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். உண்மையில் ம.பி.,யின் சாலை, தண்ணீர், மின்சார வசதிகள் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

அதேபோல் சிவ்ராஜ் சவுகான் தன்னை மக்களுடன் மாமாஜி என்று தொடர்புபடுத்திக் கொண்டது உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக மகளிர் வாக்குகளை மாமாஜி (தாய்மாமன்) உறவால் அள்ளியுள்ளது பாஜக. லாட்லி பெஹ்னா என்ற திட்டம் மூலம் சிவ்ராஜ் சிங் சவுகான் மகளிர் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்து வைத்திருந்தார். முதலில் இத்திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்டில் இந்தத் தொகையை அவர் ரூ.1250 ஆக அதிகரித்திருந்தார். இது வெறும் தேர்தலை ஒட்டிய உயர்வாக ம.பி. மக்கள் குறிப்பாக பெண்கள் பார்க்கவில்லை. அதனால்தான் வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர்.

சத்தீஸ்கரை இழந்த காங்கிரஸ்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அவற்றைத் தவிடுபொடியாக்கியுள்ளது பாஜக. படுதோல்வியிலிருந்து மீண்டுள்ளது. 2003-ல் இருந்து தொடர்ந்து 3 முறை சத்தீஸ்கரில் ஆட்சி செய்தது பாஜக. 2018-ல் பாஜக படுதோல்வி அடைந்திருந்தது. அப்போது பாஜக ஆளும் கட்சி. வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக வலுவான எதிர்க்கட்சியாகக் கூட இருக்கத் தகுதியற்றுப் போயிருந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் 50 பிளஸ் இடங்களை எளிதாக வசப்படுத்துகிறது பாஜக.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றியை உறுதியாக நம்பிய நிலையில் அமலாக்கத் துறை கையிலெடுத்த மகாதேவ் கேமிங் ஆப் ஊழல் மற்றும் மதுபான கொள்முதல் ஊழல், மாநிலத்தின் மாவோயிஸ்டு தாக்குதல்கள், மத மோதல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக உட்கட்சிப் பூசல் அதற்குப் பெரும் பின்னடைவைப் பெற்றுத் தந்துள்ளது.

ராஜஸ்தானில் கேடான கெலாட் - பைலட் மோதல்: ராஜஸ்தானில்பாஜக 115 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. அதேவேளையில், ஆளும் காங்கிரஸ் கட்சி 71 தொகுதிகளில் மட்டுமே வெற்றி முகம் கண்டு இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்கு பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் முக்கிய தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) ஜெய்ப்பூர் சென்றார். அப்போது அவரை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் ஒன்றாக இணைந்து வரவேற்றனர். அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், "நாங்கள் ஒன்றாக மட்டும் இல்லை, ஒற்றுமையாகவும் இருக்கிறோம். இருப்போம். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வெற்றி பெரும்" என்று தெரிவித்தார். அப்போதே இது ஆர்கஸ்ட்ரேடட் நிகழ்வு, கெலாட் - பைலட் பூசல்இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ரெட் டைரி சர்ச்சை: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த சில விஷயங்களைத் தொடர்ந்து ‘ரெட் டைரி’ அம்மாநில அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டது என்று சொந்தக் கட்சி, அரசுக்கு எதிராக கருத்துக் கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குடா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தன்னால் முதல்வர் அசோக் கெலாடை அம்பலப்படுத்த முடியும் என்று கூறி கையில் ஒரு ரெட் டைரியுடன் (சிவப்பு நிற டைரி) சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற அவர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை வைத்துதான் பாஜக அதன் பிரச்சாரங்களை முன்னெடுத்தது. ரெட் டைரியில் எல்லாமே இருக்கிறது என்று பாஜகவினர் பட்டியலிட அது வாக்காளர்களை மாஸாக வளைத்துவிட்டது தேர்தல் முடிவில் அப்பட்டமாகத் தெரிகிறது.

கேசிஆர் எனும் கோட்டை: தெலங்கானா மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த போராளி, மூத்த தலைவர் கே.சந்திரசேகர ராவ். ஆனால் அவர் இத்தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளார். தெலங்கானாவில் ஹாட்ரிக் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸிடம் படுதோல்வி அடைந்துள்ளது தெலங்கானா. காங்கிரஸின் வெற்றி கவனம் பெற்றிருந்தாலும், மாநில கட்சியை வீழ்த்தி தேசிய கட்சிகள் தடம் பதிப்பது பிராந்திய அரசியலுக்கு உகந்தது அல்ல என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காங்கிரஸின் ராகுல், பாஜகவின் மோடி அமித் ஷாவின் பிரச்சாரங்கள் களை கட்டியது, உள்ளூர் கட்சியான ஒவைசி கட்சியைவிட பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பது ஆகியன தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மாநில அரசியலில் அதிகரிப்பதற்கான சான்று என்று கூறப்படுகிறது.

ரேவந்த் ரெட்டியின் வெற்றிப் பேரணி

கேசிஆர் என்ற தெலங்கானாவின் அடையாளத்தை வீழ்த்த காங்கிரஸுக்கு பக்கபலமாக இருந்தவராக அறியப்படுகிறார் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி. தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றியைத் தொடர்ந்து அத்தனை ஊடக கவனமும் ரேவந்த் ரெட்டியை நோக்கித் திரும்பியுள்ளது. தோல்வியை சந்தித்த பிஆர்எஸ் கட்சியை சார்ந்தவரும் கேசிஆரின் மகளுமான கவிதா, ”எக்ஸ் தளத்தில் ஆட்சியில் இருந்தாலும் இருந்தாவிட்டாலும் நாங்கள் தெலங்கானா மக்களின் சேவகர்கள். தாய்மண்ணுக்காக உற்சாகமாக உழைப்போம்” என்று நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இது சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும் அம்மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை விசாரணை வளையத்துக்குள் வந்த பின்னர் பிஆர்எஸ் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி என்னவாகும்? - 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அடுத்த 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சத்தீஸ்கரில் 11 மக்களவைத் தொகுதிகள், ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகள் என மொத்தம் 69 மக்களவைத் தொகுதிகள்தான் காங்கிரஸின் அக்கறையாக இருக்க வேண்டும். கெலாட் - பைலட் மோதல், பாகெல் - தியோ மோதல் ஆகியன ராகுல் காந்தியின் அத்தனை முயற்சிகளையும் வீழ்த்தியுள்ளன. இதனால் கட்சியில் உட்பூசல்களை சரி செய்வதும் காங்கிரஸுக்கு முக்கியமான மக்களவைத் தேர்தல் ஆயத்தப் பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, கருத்தியல் ரீதியான போட்டி தொடரும் எனத் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சூலே இந்த 4 மாநில தேர்தல் முடிவுகளால் மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x