Published : 03 Dec 2023 04:32 PM
Last Updated : 03 Dec 2023 04:32 PM

பாஜக வசமாகும் ராஜஸ்தான்: வசுந்தரா ராஜே அடுக்கும் காரணங்களும், காங். ‘சறுக்கல்’ பின்புலமும்!

அசோக் கெலாட் | வசுந்தரா ராஜே | மோடி

புதுடெல்லி: ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை வசப்படுத்தும் நிலையில், “இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடியின் தலைமைக்கும், அமித் ஷாவின் வியூகத்துக்கும் கிடைத்த வெற்றி” என்று அம்மாநில பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 115 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. அதேவேளையில், ஆளும் காங்கிரஸ் கட்சி 71 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தக்கவைக்க தவறிவிட்ட தனது ஆட்சியை கெட்டியாக பிடித்துவிட்டது பாஜக. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் டோன்ங்க் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்து வந்தார். தற்போது அவர் முன்னிலையில் இருக்கிறார். அரச பரம்பரையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் இன்று மாலை ஒப்படைப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியை தக்க வைக்க தவறிய காங்கிரஸ்: ராஜஸ்தானில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பாஜக தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் தலைமைக்கும், அமித் ஷாவின் வியூகத்துக்கும் கிடைத்த வெற்றி. மேலும் நட்டா தலைமைக்கு கிடைத்த வெற்றி. மிக முக்கியமாக, இது எங்கள் கட்சித் தொண்டர்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் அக்சோக் கெலாட் அரசுக்குஎதிராக ரெட் டைரியை மையமாக வைத்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் காய் நகர்த்தினார்கள். தற்போது அதற்கான பலனையும் அடைந்துவிட்டார்கள். இது குறித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அமித் ஷா "ரெட் டைரி காங்கிரஸ் கட்சியின் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது. இந்திய வரலாற்றில் இது மாதிரியான விஷயங்கள் இதுவரை நடந்ததே இல்லை” என்று கூற, மோடியோ, “ரெட் டைரியில் உள்ள ரகசியத்தால், வரும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும்” என்று அறை கூவல் விட்டார். அதன் பிறகு முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையேயான உட்கட்சி பூசல் தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால், வசுந்தரா ராஜேவே முதல்வர் தேர்வாக இருப்பார் என பாஜக தரப்பில் பேசப்படுகிறது.

ரெட் டைரி பின்னணி: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த சில விஷயங்களைத் தொடர்ந்து ‘ரெட் டைரி’ அம்மாநில அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டது என்று சொந்தக் கட்சி, அரசுக்கு எதிராக கருத்துக் கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குடா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தன்னால் முதல்வர் அசோக் கெலாடை அம்பலப்படுத்த முடியும் என்று கூறி கையில் ஒரு ரெட் டைரியுடன் (சிவப்பு நிற டைரி) சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற அவர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் கிளர்ச்சி செய்தபோது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கெலாட் தரப்பு எம்எல்ஏக்கள், சுயேட்சைகள் மற்றும் பிறருக்கு வழங்கப்பட்ட தொகைகளின் விபரங்கள் இதில் அடங்கியுள்ளது என்று குடா தெரிவித்திருந்தார். ராஜேந்திர குடாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, அவை இட்டுக்கட்டப்பட்டவை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x