Published : 03 Dec 2023 02:57 PM
Last Updated : 03 Dec 2023 02:57 PM

சத்தீஸ்கரில் ‘கம் பேக்’ கொடுத்து வியப்பூட்டிய பாஜக - காங்கிரஸ் கவிழ்ந்தது எப்படி?

பூபேஷ் பாகெல் (இடது); ராமன் சிங் (வலது).

ராய்ப்பூர்: சத்தீஸ்கரும், தெலங்கானாவும் காங்கிரஸுக்குதான் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டிய நிலையில், சத்தீஸ்கரில் கம் பேக் கொடுத்த பாஜக, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்ததோடு, ஜனநாயக நாட்டில் கருத்துக் கணிப்புகள் மட்டுமே தேர்தலை நிர்ணயித்துவிட முடியாது என்பதையும் ஆணித்தரமாக உறுதி செய்துள்ளது.

படுதோல்வியிருந்து மீண்ட பாஜக: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. நவ.17-ம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து சத்தீஸ்கர் தேர்தலில் 76.31% வாக்குகள் பதிவாகியிருந்தது. ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அவற்றைத் தவிடுபொடியாக்கியுள்ளது பாஜக. படுதோல்வியிலிருந்து மீண்டுள்ளது.

2003-ல் இருந்து தொடர்ந்து 3 முறை சத்தீஸ்கரில் ஆட்சி செய்தது பாஜக. 2018-ல் பாஜக படுதோல்வி அடைந்திருந்தது. அப்போது பாஜக ஆளும் கட்சி. வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக வலுவான எதிர்க்கட்சியாகக் கூட இருக்கத் தகுதியற்றுப் போயிருந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் 50 பிளஸ் இடங்களை எளிதாக வசப்படுத்துகிறது பாஜக.

தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் முதல்வர் ராமன் சிங் (பாஜக) கூறுகையில், ”சத்தீஸ்கர் மக்கள் பிரதமர் மோடியின் வாக்குறுதிகளை நம்பினர். அதுதான் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. நாங்கள் இதனை கணித்திருந்தோம். இருப்பினும் இதுபோல் பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பூபேஷ் பாகெலை சத்தீஸ்கர் மக்கள் புறக்கணித்துள்ளனர். அவரின் ஊழல், மாநிலத்தின் மதுபான ஊழல், மகாதேவ் சூதாட்ட ஆப் சர்ச்சை ஆகியன காங்கிரஸ் தோற்கடித்துள்ளது” என்றார்.

புரட்டிப்போட்ட சூதாட்ட செயலி: சத்தீஸ்கரில் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னர் வரை பாஜக அலை ஏதும் ஏற்படவில்லை. ஆனால், திடீரென விஸ்வரூபம் எடுத்த மகாதேவி சூதாட்ட செயலி சர்ச்சை அம்மாநில அரசியல் களத்தையே திருப்பிப் போட்டது.

சர்ச்சையின் பின்னணி: சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவர் சத்தீஸ்கரின் பிலாய் பகுதியில் பழச்சாறு கடை நடத்திவந்தார். இவர் நண்பர் ரவி உப்பால்.இவர் டயர் கடை நடத்தி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இருவரும் துபாய் சென்றனர். அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த திருமண விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.

சிக்கிய முதல்வர்: கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில் துபாயில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. துபாயில் நடைபெற்ற சவுரப் சந்திரகரின் திருமணம் மூலம் மகாதேவ் செயலி குறித்தும் அந்த செயலி வாயிலாக ரூ.5,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்த அமலாக்கத் துறை, மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றதாக அசிம் தாஸ் என்ற பணப் பரிமாற்றம் செய்பவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டியது. தேர்தல் செலவுகளுக்காக இந்த பணம் பெறப்பட்டது எனவும் அமலாக்கத் துறை கூறியது. இந்தக் குற்றச்சாட்டால் சத்தீஸ்கர் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இது தற்போதைய தேர்தலில் வெகுவாகப் பிரதிபலித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மதுபான கொள்முதல் ஊழல்: சத்தீஸ்கர் மாநில வாணிப கழகம் வாயிலாக மதுபான கொள்முதல், விற்பனை நடைபெறுகிறது. இதன் கட்டுப்பாட்டில் 800 கடைகள் உள்ளன. இங்கு மதுபான விற்பனையில் பெரும் மோசடி நடைபெற்று உள்ளதாக வருமானவரித்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மாநில தொழில் மற்றும் வர்த்தகதுறை செயலாளராக உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா உள்ளிட்ட சிலர் மீது புகார் கூறப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை முதல்வருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கத்தில் இந்த வழக்கைக் கையாள்வதாக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அப்போது உச்ச நீதிமன்றம், "அமலாக்கத் துறை தன் மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனைகளைக் கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள். எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. ஒரு நடவடிக்கைக்கு முன்னர் அங்கே ஏற்கெனவே குற்றம் நடந்ததை உறுதி செய்துகொண்டு களமிறங்குங்கள்" என்று அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தியது.

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் உள்ள இந்த இரு வழக்குகளுமே சத்தீஸ்கர் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அமலாக்கத் துறை வழக்குகளால் காங்கிரஸ் மீது களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தி கிசான் நியாய யோஜனா, சன்சார் கிராந்தி யோஜனா, நார்வா, கார்வா, குர்வா, பாரி, நியாய ஆப்கே த்வார் ஆகிய பல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தாலும் சமீப காலமாக எழுந்த வழக்குகளும், குற்றச்சாட்டுகளும் ஆளும் காங்கிரஸுகு நெருக்கடியை ஏற்படுத்தின. கட்சி ரீதியாக துணை முதல்வர் டி.எஸ்.சிங் தேவ் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே சொல்லியபடி தனக்கும் 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி வேண்டுமென வாதிட்டுவந்தார். ஆனால் அது ராஜஸ்தானில் நிலவிய அசோக் கெலாட் - சச்சின் பைலட் மோதல் போல் அப்பட்டமாகத் தெரியவில்லை. இருப்பினும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றையெல்லாம் பாஜக தனக்கு சாதகமாக்கியது. தனது தேர்தல் பிரச்சாரங்களில், காங்கிரஸ் அரசின் ஊழல்கள், அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள், 2021-ல் காவர்தாவில் நடந்த மத மோதல், மாநிலத்தின் மாவோயிஸ்டு பிரச்சினை ஆகியனவற்றைக் கையில் எடுத்தது. எப்போதும் போல் தவறவிடாமல் தேசிய பாதுகாப்பு என்ற அஸ்திரத்தையும் கொண்டு வந்து வெற்றி கண்டுள்ளது.

இனி என்னவாகும்? - 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அடுத்த 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சத்தீஸ்கரில் 11 மக்களவைத் தொகுதிகள், ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகள் என மொத்தம் 69 மக்களவைத் தொகுதிகள்தான் காங்கிரஸின் அக்கறையாக இருக்க வேண்டும். கெலாட் - பைலட் மோதல், பாகெல் - தியோ மோதல் ஆகியன ராகுல் காந்தியின் அத்தனை முயற்சிகளையும் வீழ்த்தியுள்ளன. இதனால் கட்சியில் உட்பூசல்களை சரி செய்வதும் காங்கிரஸுக்கு முக்கியமான மக்களவைத் தேர்தல் ஆயத்தப் பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x