Published : 03 Dec 2023 01:14 PM
Last Updated : 03 Dec 2023 01:14 PM

3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா - தலைவர்கள் ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் ஆட்சி காங்கிரஸ் வசம் செல்கிறது. அதே வேளையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சத்தீஸ்கரிலும் பாஜக முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். பார்க்க > 4 மாநில தேர்தல் முடிவுகள்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இரட்டை எஞ்சின் ஆட்சி, பிரதமர் மோடியின் தலைமை மற்றும் முதல்வரின் செயல்பாடு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அனைவரையும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் "மேஜிக் முடிந்துவிட்டது... மந்திரவாதியின் சூழ்ச்சியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் வெளியே வந்துவிட்டது. பெண்களின் கவுரவத்துக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் மக்கள் வாக்களித்துள்ளனர். ஊழல் நிறைந்த காங்கிரஸை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளன” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தாக்கியுள்ளார்.

4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “முதல்கட்டப் தகவலின்படி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையக் கூடும். சத்தீஸ்கரில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, யார் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாக கூற முடியாது. மதியம் 1 மணிக்குள் உண்மை தெரிந்துவிடும். காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜஸ்தானின் பாஜக வேட்பாளர் தியா குமாரி தனது வித்யாதர் நகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில், "மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெறவிருக்கிறது. இது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உள்ளது. கட்சித் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பொதுமக்கள் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x