Published : 03 Dec 2023 12:43 PM
Last Updated : 03 Dec 2023 12:43 PM

தெலங்கானாவில் காங்கிரஸ் ‘சம்பவம்’ செய்ய வித்திட்ட ‘வித்தைக்காரர்’ ரேவந்த் ரெட்டி யார்?

ராகுல் காந்தி தெலங்கானாவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டபோது அவருடன் பயணித்த ரேவந்த் ரெட்டி. | கோப்புப் படம்

ஹைதராபாத்: கேசிஆர் என்ற தெலங்கானாவின் அடையாளத்தை வீழ்த்த காங்கிரஸின் ஆயுதமாக இருந்தவராக அறியப்படுகிறார் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றியைத் தொடர்ந்து அத்தனை ஊடக கவனமும் ரேவந்த் ரெட்டியை நோக்கித் திரும்பியுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் நண்பகல் நிலவரப்படி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை வகிக்க, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி உறுதியான வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த கே.சந்திரசேகர ராவுக்கு இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவை அளித்துள்ளது. கேசிஆர் என்ற தெலங்கானாவின் அடையாளத்தை வீழ்த்த காங்கிரஸுக்கு பக்கபலமாக இருந்தவராக அறியப்படுகிறார் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி. தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றியைத் தொடர்ந்து அத்தனை ஊடக கவனமும் ரேவந்த் ரெட்டியை நோக்கித் திரும்பியுள்ளது.

யார் இந்த ரேவந்த் ரெட்டி? - ரேவந்த் ரெட்டி ஆரம்ப காலத்தில் பாஜக ஆதரவாளராகத்தான் அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். பாஜகவின் அங்கமான ஏபிவிபி-யில் அவர் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம் என பல அரசியல் கட்சிகளில் தன்னை ஈடுபடுத்தினார். தெலுங்க தேச கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2004, 2009 என இரு முறை எம்எல்ஏ ஆக வலம் வந்தவர் அரசியல் நுணுக்கங்களில் தேர்ந்தார்.

எல்லா கட்சிகளிலும் வலம் வந்தவர் 2017-ஆம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். 2017 தொடங்கி 2023 வரை காங்கிரஸில் குறுகிய கால பயணம்தான் என்றாலும் கூட தெலங்கானா காங்கிரஸின் முகமாக கடைசித் தொண்டன் வரையிலும் கொண்டாடப்படுகிறார். தெலங்கானா மாநிலம் பிரிந்த பின்னர் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால், 2019 தேர்தலில் கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினரானார். அதனால்தான் டெல்லி தலைமையிடம் நெருக்கமாவது அவருக்கு சாத்தியமானது.

ராகுல் காந்தி தெலங்கானாவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டபோது அவருடன் பயணித்து தனது நெருக்கத்தை இன்னும் வலுவாக்கினார் ரேவந்த் ரெட்டி. தலைமைக்கு தன்னை நெருக்கமாக வைத்துக் கொள்ளும் வித்தையை ரேவந்த் நன்றாக அறிந்திருக்கிறார் என்ற விமர்சனம் உட்கட்சிக்குள்ளேயே உண்டு. ஆனால் அது பெரிய அளவில் பூசலாக இல்லாமல் புகைச்சலாக இருந்தது. வேறு எந்த பெரிய சர்ச்சைகளிலும் சிக்காமல் தொண்டர்களின் முகமாக இருந்த ரேவந்த் மீது காங்கிரஸ் தலைமையகம் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தது. ராகுல் காந்தி பிரச்சாரங்களை திட்டமிடுவது தொடங்கி மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம், காரசார பொதுக்கூட்ட பேச்சு என நிகழ்த்த தலைமை அவர் மீது கொண்ட நம்பிக்கையை வீணாக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.

தேர்தலுக்கு முன்னர் ரேவந்த் தனது எக்ஸ் பக்கத்தில், ”பத்து ஆண்டுகளாக நடந்த பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மக்களின் விருப்பங்கள் ஆட்சி செய்யும் காலத்தை தொடங்கிவைப்போம். கைகோப்போம் தெலங்கானாவை உயர்த்துவோம்” என்று பதிவிட்டிருந்தார்.

ஆரம்பம் முதலே தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ்-க்கு அதிர்ச்சி காத்திருப்பதாக காங்கிரஸ் சொல்லிவந்தது. கருத்துக் கணிப்புகளும் அதை ஆமோதிக்க இன்று ரேவந்த் ரெட்டி அதனை நடத்திக் காட்டியுள்ளார். உலகக் கோப்பையில் பேட் கம்மின்ஸ் சொல்லி அடித்ததுபோல் ரேவந்த் ரெட்டி சொல்லி அடித்துள்ளார் என்றெல்லாம் அவருக்குப் பாராட்டுகளை மாநில காங்கிரஸார் குவித்து வருகின்றனர்.

அடுத்த முதல்வரா? - இவை ஒருபுறம் இருக்க ரேவந்த் ரெட்டி தான் தெலங்கானாவில் அடுத்த முதல்வர் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விக்கிப்பீடியாவில் அதற்குள் யாரோ எடிட் செய்து ரேவந்த் ரெட்டி தெலங்கானா முதல்வர் என்று பதிவிட்டு அதிர்வலைகளைக் கிளப்பினர். 40 ஆண்டு கால தீவிர அரசியல் அனுபவம் கொண்ட கேசிஆரை கலங்க வைத்துள்ளார் அவருடைய அரசியல் அனுபவத்தின் முன் சிறியவரான ரேவந்த் ரெட்டி. | பார்க்க > 4 மாநில தேர்தல் முடிவுகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x