Published : 28 Nov 2023 05:49 AM
Last Updated : 28 Nov 2023 05:49 AM

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த டிசம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைகிறது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை ஆளும் பாஜக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரீக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷியா ஆகிய 3 மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள் ளும் என்று தெரிகிறது.

மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, மக்களவையில் கேள்விஎழுப்ப பணம் பெற்ற விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுபரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மஹுவா பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது சிவில் சட்டம், பழைய சட்டங்களுக்கு பதிலாக புதிய மசோதாக்கள், மஹூவா மொய்த்ரா விவகாரம், ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டு உள்ளன. மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை ஏவி விடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம்தேதி வெளியாக உள்ளன. இந்தமுடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் பாஜகவின் கை ஓங்கியிருக்கும், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருந்தால் இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆவேசமாக குரல் எழுப்பக்கூடும்.

இந்த சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக டிசம்பர் 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x