Published : 26 Nov 2023 06:17 AM
Last Updated : 26 Nov 2023 06:17 AM
புதுடெல்லி: ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக செபியின் விசாரணையை சந்தேகிக்க முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதானிகுழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறது’’ என குற்றம்சாட்டப் பட்டது. இதைத் தொடர்ந்து அதானிகுழுமத்தின் பங்கு மதிப்பு கடும்வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடிஇழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. செபி அதன் அறிக்கையை தாக்கல் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், “ஓய்வு பெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் அமைக்கப்பட்டக் குழுவில் அதானிக்கு பழக்கமானவர்கள் இடம்பெற்றனர். இதனால், அந்தக் குழுவின் விசாரணை சந்தேகத்துக்குரியதாக உள்ளது. அதேபோல், செபியும் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று சர்வதேச நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன” என்றார்
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “இது நியாயமற்ற குற்றச்சாட்டு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் குழுவில் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் இடம்பெறுவது வழக்கம். அந்த நிபுணர்களுக்கு அதானியுடன் எப்போதோ இருந்த தொடர்பை முன்வைத்து அக்குழுவின் விசாரணையை கேள்விக்கு உட்படுத்துவது பொறுப்பான அணுகுமுறை இல்லை. அதேபோல்.பங்குச் சந்தை தொடர்பான ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்புதான் செபி. எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த அமைப்பின் மீது குற்றம் சுமத்த முடியாது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
செபி தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “செபி அதன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இனி கால அவகாசம் கோராது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 24 பரிவர்த்தனைகளில் 22 பரிவர்த்தனைகள் மீதான விசாரணை முடிவடைந்துவிட்டது” என்றார்.
இதற்கு பதிலளித்த, தலைமை நீதிபதி சந்திரசூட், “ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் பங்குச்சந்தை மீது தாக்கம் செலுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை செபி எடுக்க வேண்டும்” என்றார்.
விசாரணை முடிந்த நிலையில், இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT