Published : 13 Jan 2018 09:27 AM
Last Updated : 13 Jan 2018 09:27 AM

12 பர்ஸ்களை தெருக்களில் வீசிவிட்டு சோதனை: நேர்மையான நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு இரண்டாவது இடம்

உலகின் நேர்மையான நகரங்கள் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய நகரங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ் உலகம் முழுவதும் வாழும் மக்களின் நேர்மை குறித்து அண்மையில் ஓர் ஆய்வு நடத்தியது. இதற்காக மும்பை உட்பட 16 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நகரிலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 12 பர்ஸ்கள் வீசப்பட்டன. ஒவ்வொரு பர்ஸிலும் அந்தந்த நாட்டு பணத்தில் சுமார் ரூ.3,200 வைக்கப்பட்டது. அத்துடன் உரிமையாளரின் பெயர், செல்போன் எண், குடும்ப புகைப்படம் ஆகியவையும் வைக்கப்பட்டன.

பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் வீசப்பட்ட 12 பர்ஸ்களில் 11 பர்ஸ்களை அந்த நகர மக்கள் திரும்ப ஒப்படைத்தனர்.

இந்தியாவின் வர்த்தக தலை நகரான மும்பையில் முக்கிய பகுதிகளில் வீசப்பட்ட 12 பர்ஸ்களில் 9 பர்ஸ்களை நகர மக்கள் திரும்ப ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவரான ராகுல் ராய் கூறியபோது, ‘தவறு செய்வதற்கு எனது மனசாட்சி இடம் அளிக்காது’ என்றார். வைஷாலி என்ற பெண் கூறியபோது, “நேர்மையாக இருக்குமாறு எனது பெற்றோர் எனக்கு கற்பித்தனர். அதையே நான் எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்” என்றார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தலா 8 பர்ஸ்களும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, நெதர்லாந்து தலைநகர் ஆம்ரஸ்டர்தமில் தலா 7 பர்ஸ்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

ஜெர்மனியின் பெர்லின், ஸ்லோவேனியாவின் லியுப்லியானா ஆகியவற்றில் தலா 6 ப்ர்ஸ்கள், பிரிட்டன் தலைநகர் லண்டன், போலந்து தலைநகர் வார்ஸாவில் தலா 5 பர்ஸ்கள், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ, சுவிட்சர்லாந்தின் ஜுரிச் ஆகியவற்றில் தலா 4 பர்ஸ்கள், செக் குடியரசு தலைநகர் பிராகாவில் 3 பர்ஸ்கள், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் 2 பர்ஸ்கள், போர்ச்சுகலின் லிஸ்பென் நகரில் 1 பர்ஸ் மட்டுமே திரும்ப கிடைத்தன.

இந்த ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட நேர்மையான நகரங்கள் பட்டியலில் ஐரோப்பிய நகரங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை 2-வது இடத்தைப் பிடித்திருப்பது சர்வதேச அரங்கில் இந்தியர்களின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x