Last Updated : 24 Nov, 2023 04:59 AM

 

Published : 24 Nov 2023 04:59 AM
Last Updated : 24 Nov 2023 04:59 AM

விநாடிக்கு 2,700 கனஅடி நீர் காவிரியில் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடெல்லி/ பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் டிச‌ம்பர் மாத இறுதி வரை விநாடிக்கு 2,700 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த அக்.30-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நவ.22-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, இதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. இருப்பினும், தமிழகத்துக்கு விநாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீரை திறந்துவிட்டது.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் செயலர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுதலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா,புதுச்சேரி மாநில நீர்வளத் துறை அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், கர்நாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழை அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு தரப்பு: உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுப்படி, தமிழகத்துக்கு நவம்பர் வரை 150 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால், இந்த ஆண்டில் இதுவரை 58 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 92 டிஎம்சிநிலுவையில் உள்ளது. கர்நாடகா நீர் திறக்காததால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இப்போதுபரவலாக மழை பெய்து வருகிறது. த‌மிழக விவசாயிகளின் நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டுமானால், கர்நாடக அரசு விநாடிக்கு13 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும். டிசம்பர் வரை வழங்க வேண்டிய நீருடன், நிலுவையில் உள்ள நீரையும் திறக்க வலியுறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு தரப்பு: கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவில்நீர் இருப்பு உள்ளது. இருக்கும் நீரை கொண்டே, அடுத்த ஆண்டுவரை பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிஉள்ளது. கடந்த வாரத்தில் பெய்தமழை நீரை முழுவதுமாக தமிழகத்துக்கு திறந்துவிட்டோம். 2,600 கனஅடிக்கும் அதிகமாகவே நீர் திறக்கப்பட்டது. ஆனால், வரும்நாட்களில் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், அதை பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா, ‘‘தமிழகத்தின் விவசாய தேவைக்காக கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து டிசம்பர் மாத இறுதிவரை விநாடிக்கு 2,700 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது, நவ.23-ம் தேதி (நேற்று) முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,700 கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று பரிந்துரை செய்தார்.

இதற்கு கர்நாடக விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத ஆகிய கட்சியினர் காவிரி நீரை தமிழகத்துக்கு திறக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

இன்று ஆலோசனை: கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத் துறை பொறுப்பு அமைச்சருமான‌ டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது சிரமம். கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது. தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த பரிந்துரை குறித்து சட்ட நிபுணர்களுடன் நவ.24-ம் தேதி (இன்று) ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ம‌றுபரிசீலனை செய்யுமாறு, காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மீண்டும் வலியுறுத்த இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x