Last Updated : 29 Jan, 2018 03:05 PM

 

Published : 29 Jan 2018 03:05 PM
Last Updated : 29 Jan 2018 03:05 PM

மகாராஷ்டிர முதிய விவசாயி விஷம் அருந்தி தற்கொலை: முதல்வர் பட்னாவிஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்!

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 84 வயது முதிய விவசாயி ஒருவர் மந்திராலயத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.

ஞாயிறன்று துலே என்ற இடத்தைச் சேர்ந்த தர்மா பாட்டீல் என்ற இந்த விவசாயி துயர முடிவுக்கு மரணமடைந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இதனை, ‘தற்கொலை அல்ல கொலை’ என்று கூறி பாஜக-சிவசேனா ஆட்சியைச் சாடியுள்ளது. மூத்த அமைச்சர்கள் திங்களன்று மருத்துவமனைக்கு விரைந்தனர்.

தர்மா பாட்டீல் என்ற 84 வயது விவசாயி, தனது நிலத்தை மகாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி நிறுவனம் சூரிய மின் உற்பத்திக்காக வாங்கியதற்கு மேலும் இழப்பீடு கேட்டு ஜனவரி 22-ம் தேதி மந்த்ராலயம் வந்தார். இது தொடர்பாக முதல்வரையும் தான் சந்திக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் மயங்கி விழுந்த தர்மா பாட்டீல் செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தந்தை தன் மகனிடம் எலிபாஷாணம் உட்கொண்டதாக தலையில் இடியை இறக்கினார். பிற்பாடு இவரது உடல்நிலை மோசமடைய ரத்தச்சுத்திகரிப்பு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், ஆனால் சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் ஞாயிறு இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், பாட்டீல் கொலை செய்யப்பட்டுள்ளார், இதற்கு அரசுதான் பொறுப்பு, நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.

“பாட்டீலின் நிலத்துக்கு ரூ.4 லட்சம் மட்டுமே இழப்பீடு கொடுத்துள்ளனர், ஆனால் மற்றவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் மனவேதனையடைந்து தனக்கு நீதி வேண்டும் என்று போராடியுள்ளார், ஆனால் மாநில அரசு இவரைப் புறக்கணித்தது” என்றார் அசோக் சவான்.

முன்னால் முதல்வர் பிரிதிவி ராஜ் சவான் கூறும்போது, “உணர்வற்ற, மழுங்கிப்போன அரசினால் ஏற்பட்ட இவரது மரணம் ஆழமாக வலி ஏற்படுத்துகிறது” என்றார்.

இவர் மேலும் கூறும்போது, “விவசாயக் கடன் தள்ளுபடி குளறுபடிகள், வருவாயற்ற விவசாயப் பொருள் விலைகள், நியாயமற்ற இழப்பீட்டுத் தொகையில் விவசாய நிலம் பறிப்பு ஆகியவை இன்னொரு விலை மதிப்பற்ற உயிரைக் காவு வாங்கியுள்ளது” என்றார்.

முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடுமையாக சாடியபோது, “யாருக்காக இந்த அரசு வேலை செய்கிறது. மக்கள் நலனுக்காக பணியாற்ற முடியவில்லை எனில் ஆட்சியில் இருக்க உரிமை இல்லை” என்று கூறியதோடு நீதீக்காக பலியான விவசாயியின் மகன் நரேந்திர பாட்டீலுக்கு இது தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்போவதாக உறுதி அளித்தார்.

ஸ்வாபிமானி ஷெட்காரி சங்கடனா தலைவர் ராஜு ஷெட்டி கூறும்போது, “இதற்குக் காரணமான அதிகாரிகல் மீது கொலை வழக்கு தொடர வேண்டும். இடைத்தரகர் இல்லாததால் இவருக்கு ரூ.4 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

இந்நிலையில் பிரேதப்பரிசோதனை முடிந்து தர்மா பாட்டீலின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்ட போது நிலத்துக்கு அரசு கூடுதல் இழப்பீடு வழங்குவதை உறுதி செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று ஆட்சேபணை தெரிவித்தனர்.

இது பெரிய சர்ச்சையாக வெடிக்கும் என்று அஞ்சி மாநில அரசு பாட்டீல் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீட்டுக்கான எழுத்துப் பூர்வ உத்தரவாதம் அளித்துள்ளது.

ஆனால் மின்சாரத்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, பாட்டீல் குடும்பத்துக்கு போதிய இழப்பீடு வழங்க நிலத்தை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்ததோடு, முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 2009-2015-ல் நடத்திய நில சர்வேதான் இந்த ‘அநீதி’க்குக் காரணம் என்று எதிர்க்குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x