Published : 18 Nov 2023 05:10 AM
Last Updated : 18 Nov 2023 05:10 AM

விறுவிறுப்பாக நடந்த சட்டப்பேரவை தேர்தல் - ம.பி.யில் 71%, சத்தீஸ்கரில் 68% வாக்குப்பதிவு

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவைகளுக்கு நேற்று ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில், 70 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் 71.16%, சத்தீஸ்கரில் 68.15% வாக்குகள் பதிவாகின.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபகன் சிங் குலாஸ்தே உட்பட பாஜக, காங்கிரஸ், ஆத் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. நக்சல் பாதிப்பு உள்ள பாலகாட், மண்ட்லா, திந்தோரி மாவட்டங்களில் சில வாக்குச்சாவடிகளில் மட்டும்மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.6 கோடி. வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இங்கு 5,000 வாக்குச்சாவடிகளை பெண் அதிகாரிகளும், 183 வாக்குச்சாவடிகளை மாற்றுத் திறனாளிகளும் இயக்கினர். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. போபாலில் 80 வயதுக்கு மேற்பட்ட 2,510 வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் முறையை தேர்வு செய்ததாக போபால் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஆசிஸ் சிங் கூறினார்.

42,000 வாக்குச் சாவடி மையங்களில் வெப் கேமரா வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மத்திய பிரதேசத்தில் மாநில போலீசாருடன் இணைந்து 700 கம்பெனி மத்தியபடையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தூரில் பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்டமோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். ராஜ்நகர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் சிங்குடன் சென்ற காங்கிரஸ் பிரமுகர் சல்மான் கான் மீது,பாஜக வேட்பாளர் அரவிந்த் படேரியாவுடன் வந்த ஆதரவாளர்களின் கார் மோதியது. இதில் சல்மான் கான் உயிரிழந்தார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள், பாஜக பிரமுகர்களின் கார்களை அடித்து நொறுக்கினர். ஒருசில சம்பவங்கள் தவிர, வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 71.16 சதவீத வாக்குகள் பதிவாகின.

சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு: சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. நக்சல் பாதிப்பு உள்ள 20 தொகுதிகளில் கடந்த 7-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இதர 70 தொகுதிகளுக்கு நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் பூபேஷ் பாகெல் உட்பட 958 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18,800-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்குப்பதிவு காலை 8 மணிக்குதொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 68.15 சதவீத வாக்குகள் பதிவாகின.

நக்சலைட் தாக்குதல்: சத்தீஸ்கர் மாநிலம் பாதே கோப்ரா வாக்குச்சாவடியில் மாலைவாக்குப் பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள் வாக்கு பெட்டிகள் ஒப்படைக்கும் மையத்துக்கு திரும்பினர். அப்போது அவர்களை குறிவைத்து நக்சலைட்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில்இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையை சேர்ந்த தலைமை காவலர் ஜொகிந்தர் சிங் உயிரிழந்தார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பதிவான வாக்குகள், டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x