Published : 15 Nov 2023 06:07 PM
Last Updated : 15 Nov 2023 06:07 PM

“குறைந்தது 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்” - சச்சின் பைலட் உறுதி

சச்சின் பைலட்

இந்தூர்: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது 4-ல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் குறைந்தபட்சம் 4-ல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கான தகுதியை கட்சி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கூட்டங்களில் கிடைத்த வரவேற்பு, பாஜக மீது மக்கள் காட்டிய அவநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு நான் இதைச் சொல்கிறேன்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு மாற்று யார் என்று கேட்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரை இது பதவியைப் பிடிப்பது பற்றியது அல்ல. இந்தியாவின் அனைத்து கட்சிகளும் பா.ஜ.க.வை தோற்கடிக்க கூட்டாக இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன. ஏனெனில், நமது தேசத்திற்கு ஒரு சிறந்த மாற்று தேவை. எனவே, தேர்தலுக்குப் பிறகு யார் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு மாநிலங்களின் மூத்த தலைவர்கள் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்கள். காங்கிரஸ் மிகவும் பழமையான கட்சி. காங்கிரஸ் மீது நிறைய ஈர்ப்பு உள்ளது. நாடு முழுவதும் நிறைய ஆதரவாளர்கள் உள்ளனர். தனிநபர்களை முன்னிறுத்துவதற்கு நாங்கள் ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்தியா கூட்டணி எந்த அளவு வலிமையாக இருக்கிறதோ அந்த அளவு பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

2019-ல் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்ததை நாம் மறந்துவிட முடியாது. இப்போது மூன்றில் இரண்டு பங்கினர் ஒன்றாக இணைந்துள்ளனர். இது பாஜகவைக் கவலையடையச் செய்கிறது. அதனால்தான் எங்கள் கூட்டணியின் பெயரைக் கூட ஏற்க முடியாத அளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் பாஜக உள்ளது. கூட்டணியின் பெயர் பாஜகவை உலுக்கி விட்டது. அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பது அவர்களுக்கும் தெரியும். எனவே, நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கூட்டணிக் கட்சிகள் வலுவாக உள்ளன. சின்ன சின்ன வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மிகவும் முதிர்ந்த, மூத்த தலைவர்கள் ஓரணியில் இருக்கிறார்கள். நாடு என்ற வகையில் இந்தியா, ஒரு கட்சியை விட மிக முக்கியமானது. தேசத்திற்கு ஒரு மாற்று தேவை, இந்தியா கூட்டணிதான் அந்த மாற்று.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில், இண்டியா கூட்டணியில் சில பிரச்சினைகள் இருந்திருக்கலாம். ஆனால், மக்களவைத் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படாது. இண்டியா கூட்டணி என்பது இந்தியாவுக்கு ஒரு சிறந்த மாற்றைக் கொடுப்பதற்கானது. வரும் காலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த வியூகம், பிரச்சாரம் மற்றும் தேர்தல் சார்ந்த பணிகளை நீங்கள் காண்பீர்கள். இண்டியா கூட்டணி சிறப்பாக செயல்பட, காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பெற வேண்டியது அவசியம். தற்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட்டால், இண்டியா கூட்டணி தானாகவே சரியாகிவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x