Published : 13 Nov 2023 11:04 PM
Last Updated : 13 Nov 2023 11:04 PM

ஸ்ரீராம ஜென்மபூமி கும்பாபிஷேகம் | “10 கோடி குடும்பங்களை அழைப்போம்” - விஷ்வ ஹிந்து பரிஷத்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சூழலில் இந்த நிகழ்வில் பங்கேற்க 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை அழைப்போம் என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

நீண்டகால சட்ட போராட்டத்துக்குப்பின் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், ராமர் கோயில் கருவறையில் அடுத்தாண்டு ஜனவரி 22-ம் தேதி ராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்ய, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை குழுவினர் முடிவு செய்தனர். இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பின் பேரில், வரும் ஜனவரி மாதம் அயோத்தியில் நடைபெறவுள்ள ராம் லாலா பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களை அழைப்போம் என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத செயல் தலைவர் அலோக் குமார் இன்று தெரிவித்தார்.

இந்த நாளில், அனைத்து இந்து மரபுகளைச் சேர்ந்த சுமார் 4000 துறவிகள், வி.எச்.பி-யின் தேசிய தலைவர்கள் மற்றும் நாட்டின் மூத்த சமூக, கலாச்சார தலைவர்கள் அயோத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தீபாவளியைக் கொண்டாடுகிறோம். ஆனால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராம்ஜி அயோத்திக்கு வரும் 2024, ஜனவரி 22-ம் தேதி பிராண பிரதிஷ்டை நிகழ்வு, நமக்கு இரண்டாவது தீபாவளி போன்றது, இது சுதந்திர பாரதத்தின் அமிர்த காலம். எனவே, இந்த பிராண பிரதிஷ்டை விழாவில் உலக இந்து சமுதாயம் முழுவதுமே நேரடியாக பங்கேற்பது அவசியம்.

இருந்தலாஉமி அனைத்து ராம பக்தர்களையும் ஒரே நாளில் அயோத்திக்கு அழைக்க முடியாது. எனவே, உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் பகுதி அல்லது கிராமத்தின் கோயிலை அயோத்தியாகக் கருதி அங்கு திரள வேண்டும் என்பதே நமது அழைப்பு. அங்குள்ள மரபுப்படி பூஜை, வழிபாடுகள் மற்றும் சடங்குகளைச் செய்ய வேண்டும்.

“ஸ்ரீ ராம் ஜெய் ராம். ஜெய் ஜெய் ராம்” என்ற மந்திரத்தை ஜபித்து, அயோத்தியின் பிரம்மாண்டமான தெய்வீக நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து, ஆரத்தியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். அனைவரும் ஒற்றுமையாக ஸ்ரீ ராமரின் பிரசாதத்தைப் பகிர்ந்து, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வைக் கண்டு மகிழுங்கள்.

2023-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில் பூஜை செய்யப்பட்ட புனித ‘அக்ஷதை’ (மஞ்சள் அரிசி) கலசம் 45 மாகாணங்களுக்கு/பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லியில் அலோக் குமார் தெரிவித்தார். தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அழைப்பின் பேரில், விஷ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள், பிற இந்து அமைப்புகளுடன் சேர்ந்து, ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை, நாட்டின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குச் செல்வார்கள், அங்கு அனைத்து தரப்பு மக்களையும் இந்த புனித நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பார்கள். வெளிநாட்டில் வாழும் இந்துக்களுக்கும் இதேபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பூஜையில் வைப்பதற்காக பகவான் ராமர் மற்றும் அவரது கோயிலின் படத்தையும் மற்ற தேவையான தகவல்களையும் வழங்குவோம் என்று தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் இந்நிகழ்ச்சி நிச்சயம் நடக்கும் என்றும், லட்சக்கணக்கான இந்துக்கள் இதில் பங்கேற்பார்கள் என்பதும் இதுவரை எங்களின் மதிப்பீடு. இப்பணியில் ஈடுபட்டுள்ள குழுக்கள் பரிசு, நன்கொடை அல்லது பிற பொருட்களை ஏற்க மாட்டார்கள்.

விஷ்வ ஹிந்து பரிஷத் நாட்டை 45 மாகாணங்களாக வகைப்படுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாகாணமும் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 22 வரை ஒரு குறிப்பிட்ட நாளில் அயோத்திக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மகத்தான விழாவைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு இந்துக் குடும்பமும் ஜனவரி 22, 2024 அன்று , மங்களகரமான இரவில் குறைந்தது 5 விளக்குகளை வீடுகளில் ஏற்றி வைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரையும் அயோத்திக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார். இந்த ராமர் கோயில் உலகெங்கிலும் உள்ள இந்துக்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், சுயமரியாதையையும் பரப்பும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பாரதத்தை அதன் பெரு உச்சத்தை நோக்கி அழைத்துச் செல்லும் தேசியக் கோயிலாக இது வெளிப்படும் என அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x