Last Updated : 21 Jan, 2018 09:05 AM

 

Published : 21 Jan 2018 09:05 AM
Last Updated : 21 Jan 2018 09:05 AM

வடகிழக்கு, தென் மாநிலங்களை குறி வைக்கும் ஆர்எஸ்எஸ்: முஸ்லிம்களை அடுத்து கிறிஸ்தவர்களுக்கும் தனி பிரிவு தொடக்கம்

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பில் முஸ்லிம்களுக்கான தனிப் பிரிவு போல கிறிஸ்தவர்களுக்காகவும் தனிப் பிரிவு தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் வாழும் கிறிஸ்தவர்களை ஆர்எஸ்எஸ் கவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி, கேரளாவை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.ஜே.அல்போன்ஸை சுற்றுலா மற்றும் எலக்ரானிக் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சராக்கினார். கேரளாவில் அதிகம் வசிக்கும் கிறிஸ்தவர்களை கவரும் முயற்சியாக இது கருதப்பட்டது. இதுபோல் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்களை கவர பாஜக முயன்று வருகிறது. இதற்கு உதவிடும் வகையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பில் கிறிஸ்தவர்களுக்காக தனிப்பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வட்டாரத்தில் கூறும்போது, “முஸ்லிம்களுக்காக தனிப்பிரிவு தொடங்கி செயல்படுவதால் தான் அவர்களின் முத்தலாக் போன்ற பிரச்சினைகளை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அதுபோல் கிறிஸ்தவ மதம் தொடர்பான விஷயங்களை புரிந்துகொள்ள கிறிஸ்தவர்களுடன் கைகோர்ப்பது அவசியமாகிறது. எனவே இதற்காக தனிப்பிரிவு தொடங்கும் பணியில் எங்கள் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இதன் நோக்கம் தேச ஒற்றுமைக்கானதே தவிர அரசியல் லாபம் பெறுவது அல்ல” என்று தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் ஜனவரி 9-ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியன், டெல்லியின் கத்தோலிக்க உயர்மறை மாவட்ட பேராயர் அனில் ஜே.கோட்டோ ஆகியோருடன் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார், பாஜக தேசிய துணைத் தலைவர் ஷியாம் ஜட்ஜு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இது, கிறிஸ்தவ பிரிவு தொடங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து டெல்லியின் கிறிஸ்தவ மறையியல் கல்லூரியான வித்யா ஜோதியின் முதல்வர் பாதிரியார் பி.ஆர்.ஜான் ‘தி இந்து’விடம் கூறும்போது, “முழுக்க, முழுக்க வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்தப் பிரிவு தொடங்கப்படுகிறது. முஸ்லிம்களை போல கிறிஸ்தவர்களையும் பிரிப்பதே அதன் நோக்கம். அரசியல் கட்சிகளில் கிறிஸ்தவர்கள் சேர்வது என்பது வேறு. ஆனால் கொள்கைரீதியாக எங்களுடன் வேறுபட்டுள்ள ஆர்எஸ்எஸ், கிறிஸ்தவ தேவாலயங்களை பிரிப்பதில் இறங்கும். இது தேச ஒற்றுமைக்கு எதிராக அமையும்” என்றார்.

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் 2.5 சதவீத அளவில் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட சதவீத அளவிலும், தென் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலும் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவ்விரு பகுதிகளிலும் பாஜக காலூன்ற முயன்று வருகிறது. இதற்கு, ஆர்எஸ்எஸ் தொடங்கும் கிறிஸ்தவ பிரிவு பலன் தரும் என கருதுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, மேகாலயா, நாகாலந்து ஆகிய மாநிலங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முஸ்லிம் பிரிவு விவரம்

கடந்த 2002 பிப்ரவரியில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து முஸ்லிம்களுடன் நட்பு பாராட்டும் விதமாக ‘முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்’ என்ற பிரிவை ஆர்எஸ்எஸ் 2002 டிசம்பரில் தொடங்கியது. இந்த அமைப்பில் 25 மாநிலங்களில் 10,000 முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் தேசிய ஒருங்கிணைப்பாளராக முகம்மது அப்சல் என்பவரும் மத்திய நிர்வாகக் குழுவில் 35 முஸ்லிம்களும் உள்ளனர். இவர்கள், ராமர் கோயில், பசுப் பாதுகாப்பு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக பேசி வருவதால் இவர்களின் அமைப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x