Published : 05 Nov 2023 03:40 PM
Last Updated : 05 Nov 2023 03:40 PM

ஏர் இந்தியா விமானத்தை தகர்க்கப் போவதாக சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் மிரட்டல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வரும் நவ.19-ம் தேதிக்கு பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். விமானத்துக்கு பகிரங்கமாக அவர் விடுத்துள்ள மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோவால் சர்ச்சை: பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, சீக்கியர்களுக்கான நீதி என்ற (எஸ்எஃப்ஜெ) அமைப்பின் நிறுவனரன் தான் இந்த குர்பத்வந்த் பன்னூன். இந்தியாவில் காலிஸ்தான் தனி நாடு கோரும் அனைத்து அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தான் குர்பத்வந்தின் எஸ்எஃப்ஜெ அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்றில் குர்பத்வந்த், "நவ.19-க்கு பின்னர் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம். உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். நவம்பர் 19 ஆம் தேதி உலக பயங்கரவாத கோப்பையின் (உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்) இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றப்படும். பஞ்சாப் விடுதலை அடைந்ததும் அந்த விமான நிலையத்தின் (இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம்) பெயர் ஷாகித் பேனட் சிங், ஷாகித் ஷத்வந்த் சிங் காலிஸ்தான் விமான நிலையம் என்று மாற்றப்படும் " என்று கூறியுள்ளார்.

முதல்முறை அல்ல: குர்பத்வந்த் இவ்வாறு மிரட்டல் விடுவது இது முதல் முறை இல்லை. கடந்த செப்டம்பரில் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் ராஜாங்க ரீதியான பின்னடைவு ஏற்பட்டபோது கனடாவாழ் இந்துக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குர்பத்வந்தின் புதிய வெறுப்பு பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதைத் தொடர்ந்து, அவர் கனடா எல்லைக்குள் நுழைவதைத் தடை செய்யவேண்டும் என்று கனடாவில் உள்ள இந்து அமைப்பினைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், கனடா குடிமைப்பதிவு (Immigration) அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடா அமைச்சர் மார்க் மில்லருக்கு வழக்கறிஞர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், "குர்பத்வந்தின் பேச்சு இந்துச் சமூகத்தினரிடம் மட்டும் இல்லாமல் கனடா நாட்டு மக்களிடமும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x