Published : 03 Nov 2023 05:00 AM
Last Updated : 03 Nov 2023 05:00 AM

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை சம்மன்: விசாரணைக்கு ஆஜராக கேஜ்ரிவால் மறுப்பு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு புதிதாக சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநரிடம் அப்போதைய தலைமைச் செயலர் அறிக்கை அளித்தார். துணைநிலை ஆளுநரின் பரிந்துரைப்படி சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு ரூ.2,800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிபிஐ, அமலாக்கத் துறைகுற்றம்சாட்டியுள்ளன.

இந்த ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் மதுபான கொள்கைஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி, அவர்நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

விசாரணைக்கு ஆஜராகும்போது அவர் கைது செய்யப்படக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு முதல்வர் கேஜ்ரிவால் நேற்று ஆஜராகவில்லை. மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக அமலாக்கத் துறைக்கு கேஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

என்ன காரணத்துக்காக சம்மன் அனுப்பப்பட்டது என்பதை அமலாக்கத் துறை குறிப்பிடவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவின் தூண்டுதலால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நான் டெல்லி முதல்வராக பதவி வகிக்கிறேன். ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நான் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு தரப்பில் நடத்தப்படும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களிலும் நான் பங்கேற்க வேண்டும்.

எனவே, விசாரணைக்கு ஆஜராக கோரி அனுப்பப்பட்ட சம்மனை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் சிங்கரவுலி நகரில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் பேசிய கேஜ்ரிவால், “நான் சிறை செல்வேனா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், சிறைக்கு செல்ல ஒருபோதும் அஞ்சமாட்டேன்’’ என்று தெரிவித்தார்.

அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பொருளாதாரகுற்ற வழக்குகளில் அமலாக்கத்துறை அனுப்பும் சம்மனை ஒருநபர் அதிகபட்சம் 3 முறைதான் புறக்கணிக்க முடியும். அதன்பிறகும் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், நீதிமன்றத்தில் முறையிட்டு கைது வாரன்ட் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அமலாக்கத் துறைஅனுப்பிய சம்மனை கேஜ்ரிவால்புறக்கணித்துள்ளார். எனவே அவருக்கு புதிதாக சம்மன் அனுப்பப்படும். அவர் 3 முறைக்கு மேல் சம்மனைபுறக்கணித்தால், நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆம் ஆத்மி அமைச்சரின் வீட்டில் தீவிர சோதனை: சமூகநலத் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ராஜ்குமார் ஆனந்தின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. ‘‘சர்வதேச ஹவாலா பணப் பரிமாற்றங்கள், ரூ.7 கோடி சுங்கவரி ஏய்ப்பு தொடர்பாக அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன’’ என்று அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் (டிஆர்ஐ) வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு, முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், மேலும் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x