Last Updated : 29 Oct, 2023 05:40 AM

 

Published : 29 Oct 2023 05:40 AM
Last Updated : 29 Oct 2023 05:40 AM

மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பிற கட்சிகளின் போட்டியால் பாஜக, காங்கிரஸுக்கு சிக்கல்

புதுடெல்லி: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விந்தியா ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளின் போட்டியால் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக இண்டியா எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் உறுப்பினர்களாக காங்கிரஸ், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங்கின் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இச்சூழலில், மத்தியபிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இங்கு கடந்த 2003 முதல் தொடர்ந்து சுமார் 20 வருடங்களாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி செய்கிறது. இங்கு பாஜகவை வெல்ல காங்கிரஸ் தீவிர முயற்சியில் உள்ளது. இந்த இருமுனைப் போட்டியில் காங்கிரஸுக்கு சிக்கல் ஏற்படும் விதத்தில் ஏற்கெனவே ஆம் ஆத்மி இங்கு களமிறங்கி உள்ளது. இதையடுத்து சமாஜ்வாதியும் தனது வேட்பாளர்களை களம் இறக்கத் தொடங்கியது. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் முன்வராததால் இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தன. இதில், சமாஜ்வாதி தலைவரான அகிலேஷ், உ.பி.யில் மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸை தாம் கண்டுகொள்ளப் போவதில்லை என அறிவித்தார்.

இந்நிலையில் ம.பி.யில் தற்போது ஐக்கிய ஜனதா தளமும் 10 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த மூன்று கட்சிகளும் அதிக தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. எனினும், அக்கட்சிகள் பெறும் சிறிய எண்ணிக்கை வாக்குகளால் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக சரத் யாதவ் இருந்தார். இவர் ம.பி.யின் ஜபல்பூரை சேர்ந்தவர். சமீபத்தில் மறைந்த இவருக்கு சொந்த மாநிலமான ம.பியில் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதை வாக்குகளாக்கி வெற்றிபெறவே இங்கு ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தத் தொடங்கியுள்ளது. இத்துடன், தனது கட்சியின் வளர்ச்சிக்காக பிற மாநிலங்களிலும் தாம் போட்டியிட விரும்புவதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

இதேபோல், பாஜகவின் முக்கியத் தலைவராக இருந்தநாராயண் திரிபாதி, விந்தியா ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சியை உருவாக்கியுள்ளார். அதன் சார்பில் இதுவரை 25 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகஅதிருப்தி தலைவர்கள் இக்கட்சியில் இணையத் தொடங்கியுள்ளனர்.

ம.பி.யிலிருந்து விந்திய பிரதேசம் என்ற பெயரில் புதிய மாநிலம் உருவாக்குவது இக்கட்சியின் நோக்கம் ஆகும். இது, பாஜகவிற்கு பெரும் தலைவலியாகும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலித் வாக்குகளை பிரிக்கும் பொருட்டு உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ம.பி.யில் போட்டியில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x