“ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் இல்லை” - ஒமர் அப்துல்லா

ஒமர் அப்துல்லா | கோப்புப்படம்
ஒமர் அப்துல்லா | கோப்புப்படம்
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் கிடையாது என்றும் கட்டாயம் என்பதால்தான் நாடாளுமன்றத் தேர்தலும் இங்கு நடத்தப்படுகிறது இல்லையென்றால் அதுவும் நடத்தப்படாது என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஒமர் அப்துல்லா கூறுகையில், "ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சிகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் (பாஜக தலைமையிலான மத்திய அரசு) தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. நாங்கள் 5 ஆண்டுகளாக ஆளுநர் ஆட்சியின் கீழ் இருக்கிறோம். இந்த நிலையில் கடந்த 2019-க்கு பின்னர் இங்கு நிலைமை குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அப்படி என்றால் தேர்தலை நடத்துவதில் ஏன் தாமதம்? அவர்களுக்கு மக்களின் மனநிலை நன்றாகத் தெரியும். கட்டாயம் என்பதால் மட்டும் இங்கு நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துகிறார்கள். இல்லையென்றால் அதையும் நடத்த மாட்டார்கள்.

அவர்கள் மக்களைச் சந்திக்க வெட்கப்படுகிறார்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இங்கு பஞ்சாயத்து, பிடிசி, டிடிசி, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சட்டமன்றம் எதுக்கும் தேர்தல் கிடையாது. எல்ஏஹெச்டிசி - கார்கில் தேர்தல் அவர்களின் அச்சத்தை உறுதி செய்துள்ளது. அங்குள்ள 26 இடங்களில் 22 இடங்களை தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. வெற்றி பெற்றுள்ள இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கூட எங்களுக்கு தங்களின் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் எப்போது வந்தாலும் சரி, தேசிய மாநாட்டுக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் தினக்கூலிகளின் நிலையினை நாங்கள் ஒழுங்குமுறைபடுத்துவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். ஜம்முவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி. மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இப்போது மிகவும் கவனமாக தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது நமது கடமை. நான் நாடாளுமன்ற தேர்தலின் போது, 16 மற்றும் 17 சட்டமன்ற தொகுதிகளின் அனைத்து பிரிவுகளிலும் பணி செய்வேன்.அனைவரின் குரல்களும் கேட்பதை உறுதி படுத்துவேன். ஆலோசனைகளின் அடிப்படையில் தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் நான் வேட்பாளர்களை பிரிந்துரைப்பேன் அவர்களுக்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in