“காஷ்மீரிகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல” - முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆவேசம்

ஒமர் அப்துல்லா | கோப்புப் படம்
ஒமர் அப்துல்லா | கோப்புப் படம்
Updated on
1 min read

அனந்தநாக்: காஷ்மீரிகள் ஒன்றும் பிச்சைக்காரார்கள் அல்ல என்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

அனந்தநாக் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஒமர் அப்துல்லா, "தேர்தல் என்பது காஷ்மீரிகளின் உரிமை. அதற்காக நாங்கள் யாரிடமும் யாசகம் வேண்டி நிற்கத் தேவையில்லை. அவர்கள் (பாஜக) காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைத்தால் நல்லது. நாங்கள் வரவேற்போம். அதை நடத்தாவிட்டால் அவர்கள் நினைப்பது போல் செய்யட்டும். நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை.

காஷ்மீர் மக்களை அவ்வப்போது வலுக்கட்டாயமாக அங்குமிங்கும் அப்புறப்படுத்துகின்றனர். இதன்மூலம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நடந்து கொள்கின்றனர். ஒருவேளை தேர்தல் நடத்தினால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு மக்கள் காயங்களுக்கு மருந்தாகும் என்பது பாஜகவுக்கு தெரியும். அதனால்தான் அவர்கள் தேர்தல் நடத்துவதே இல்லை. மக்களின் புண்களுக்கு மருந்தாக இருப்பதைவிடுத்து அவர்கள் மக்களை மேலும் துன்பப்படுத்துகின்றனர்.

அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து கிராமப் பாதுகாவலர்களுக்கு ஆயுதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது அவர்கள் நிர்வாகத் தோல்விக்கு உதாரணம்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும்போது, இதனால் துப்பாக்கி கலாச்சாரம் குறையும் என்றனர். அவர்களின் கூற்றை அவர்களே இப்போது பொய்யாக்கியுள்ளனர். ஆம், 2019 ஆகஸ்ட் 5ஆன் தேதி சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியபோது இனி காஷ்மீரில் துப்பாக்கி இருக்காது என்றனர். ரஜோரியில் நடந்த தாக்குதல், நாளுக்கு நாள் பாதுகாப்பு வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதையே உணர்த்துகிறது. கிராமப்புற பாதுகாப்பு கவுன்சில்களுக்கு சிஆர்பிஎஃப் மீண்டும் ஆயுதப் பயிற்சி வழங்கவிருக்கிறது. இதுவே போதும் நிலைமையை உணர்த்த" என்றார் ஒமர் அப்துல்லா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in