

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் மீது பொதுப்பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகித்துள்ளது ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்.
இது தொடர்பாக மெஹ்பூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “ஆம் இதற்கான உத்தரவை என் தாயார் இரவு 9.30 மணியளவில் பெற்றார்.
என் தாயார் பாதுகாப்புப் படையினரால் பிடித்துச் செல்லப்படும் பையன்களை விடுவிக்க அங்கும் இங்கும் எங்கும் அலைந்து திரிந்ததைப் பார்த்திருக்கிறேன். இன்று நான் அவரது விடுதலைக்காகப் போராடுகிறேன், வாழ்க்கை முழு சுற்று வந்து விட்டது, இன்னொரு நாளை போராட்டத்தில் கழிக்க வாழ்கிறோம்” என்றார்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கொண்டு வரப்பட்ட உத்தரவை மேஜிஸ்ட்ரேட் ஒருவர், போலீஸார் ஒருவர் காவலுடன் மெஹ்பூபா முப்தி பங்களாவுக்கு வந்து அளித்து விட்டுச் சென்றார்.
இந்தச் சட்டம் தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் அலி முகமது சாகர், பிடிபி பொதுச் செயலர் சர்தாஜ் மாத்னி ஆகியோரும் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புக் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதல் மந்திரிகள் ஓமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த தகவலை மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெகபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கை கையாண்டு வரும் அவரது மகள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களுக்கு முன்பே மெகபூபா முப்தி பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை பெற்றார். 9 வயது சிறுவர்கள் மீது கூட தேசத்துரோக வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகார அரசிடம் இருந்து, இத்தகைய நடவடிக்கைகளை எதிர்பார்த்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிடிபி கட்சி கூறும்போது, “இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் மூலம் மத்தியில் ஆளும் பாஜக தலைமை அரசு மக்களின் பொறுமையைச் சோதிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியும் இத்தகைய முடிவை ‘துரதிர்ஷ்டவசமானது’ என்று வர்ணித்துள்ளது.
-பிடிஐ தகவல்களுடன்
தவறவிடாதீர்: