Published : 19 Oct 2023 12:08 PM
Last Updated : 19 Oct 2023 12:08 PM

''அமைதி மற்றும் மனித நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும்'': மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

கோப்புப் படம்

புதுடெல்லி: மனிதர்களின் நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் சமகால சீன ஆய்வுகளுக்கான மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 'விண்வெளி - உலகளாவிய தலைமைக்கான தேடலில் சீனாவின் இறுதி எல்லை' என்ற தலைப்பில் ஜிதேந்திர சிங் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "வெளிப்படைத் தன்மை, பொறுப்புடமை மற்றும் விண்வெளியின் அமைதியான பயன்பாடு ஆகிய கொள்கைகளை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. சீனா உள்பட அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுடன் வெளிப்படையான உரையாடலில் ஈடுபட வேண்டும். இதனால் நாம் ஒருவருக்கொருவர் நோக்கங்கள், முயற்சிகளை ரகசியமாகவோ அல்லது சந்தேகமாகவோ இல்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் பாதுகாப்பான, நீடித்த சூழலைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும் முடியும்.

இந்தியாவின் விண்வெளித் திட்டம் உலகளவில் போட்டியிடக்கூடிய அளவுக்கு சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் முற்றிலும் அமைதியானது. சாதாரண குடிமக்களுக்கு 'வாழ்க்கையை எளிதாக்க' உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்களுடன் இஸ்ரோ ஒத்துழைப்பை அளித்து வருகிறது. அமெரிக்காவும் அப்போதைய சோவியத் ஒன்றியமும் 1969 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு மனிதனை தரையிறக்குவதற்கு முன்பே தங்கள் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியிருந்தன. எனினும், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை உலகுக்கு அளித்தது நமது நாட்டின் சந்திரயான்தான்.

இந்தியாவின் விண்வெளிப் பயணங்கள் மனித வளங்கள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தோல்வியடைந்த ரஷ்யாவின் நிலவு திட்டத்துக்கு ரூ.16,000 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால், சந்திரயான்-3 திட்டத்துக்கு ரூ.600 கோடி மட்டுமே செலவானது. பிரதமர் விரைவு சக்தி, ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் நவீன நகரங்கள், வேளாண்மை, நீர்வள வரைபடம், தொலை மருத்துவம் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு துறைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் இன்றியமையாதவையாக உள்ளன. இதன்மூலம், சாமானிய மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.

மனித சமுதாயத்தின் பரந்த நன்மைக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்புகளை இந்தியா ஆதரிக்கிறது. விண்வெளி அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மோதல்கள் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x